எனது அன்பான தீட்சை பெற்ற , அடைக்கலம் பெற்ற , தீட்சை பெற ஆர்வமுள்ள , சிக்ஷா சீடர்கள், பேர சீடர்கள் மற்றும் நலம் விரும்புபவர்களே,

எனது ஆசீர்வாதங்கள், வாழ்த்துக்கள், பிரணாமங்களை பொருத்தமான படி ஏற்றுக்கொள்ளுங்கள்.

ஸ்ரீல பிரபுபாதருக்கு எல்லா புகழும் உரித்தாகுக.

எனது இருப்பிடத்திலிருந்து எழுதப்பட்டது: ஸ்ரீ மாயாப்பூர் சந்திரோதய ஆலயம்.

தேதி: 29 மார்ச் 2026

வழக்கமாக, ஒவ்வொரு பௌர்ணமி மற்றும் அமாவாசை தினத்திலும் நான் ஒரு செய்தியை அனுப்புவது வழக்கம்; ஆனால் இன்று எனது சீடர்கள் வியாச பூஜை விழாவைக் கொண்டாடுவதால், இந்தப் பதினைந்து நாள் செய்தியை இன்றைய ‘காமதா ஏகாதசி’ நன்னாளில் அனுப்ப விரும்புகிறேன்.

ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூருக்கு அவர் சமர்ப்பித்த வியாச பூஜை புகழுரை ஒன்றில், ஸ்ரீல பிரபுபாதர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: கிருஷ்ணரே அனைவருக்கும் ஆன்மீக குருவாகத் திகழ்கிறார்; ஆயினும், ஆன்மீக குருக்களாகச் செயல்படும் தனது பக்தர்களின் வாயிலாக, எண்ணற்ற வடிவங்களில் அவர் தனது பணியை ஆற்றுகிறார். ஒவ்வொரு ஆன்மீக குருவுக்கும் ஒரு ஆன்மீக குரு இருப்பார். எனவே, வியாச பூஜையை அனுசரிப்பதன் உண்மையான பொருள் என்னவென்றால், நாம் முழுமையான ‘குரு பரம்பரையை’ (குரு வழிமுறையை) வழிபடுகிறோம் என்பதே ஆகும். மேலும், ஒரு ஆன்மீக குருவுக்கு எத்தகைய மரியாதை கிடைத்தாலும், அவர் அதனைத் தனக்கென வைத்துக்கொள்ளாமல், அந்த மரியாதை முழுவதையும் குரு பரம்பரையின் திருவடிகளிலேயே சமர்ப்பித்துவிடுகிறார்.

எனக்கு 19 வயதாக இருந்தபோது, நான் கிருஷ்ண உணர்வு இயக்கத்தில் இணைந்தேன்; ஸ்ரீல பிரபுபாதர் கருணையுடன் என்னை தனது சீடராக ஏற்றுக்கொண்டார், மேலும் எனக்கு 21 வயதாக இருந்தபோது எனக்கு சந்நியாச தீட்சை அளித்தார். அவர் எனக்கு வெற்றிக் கொடி என்ற பொருள் தரும் ஜெயபதாகா என்ற திருநாமத்தைச் சூட்டினார். அத்துடன், அவர் எனக்குப் பல அறிவுரைகளையும் வழங்கினார். இன்றுவரை என்னால் செய்ய முடிந்தவை அனைத்தும், ஸ்ரீல பிரபுபாதரின் கருணையினால் மட்டுமே சாத்தியமானது. இருப்பினும், பல வகைகளில், பிரபுபாதர் எதிர்பார்த்த அளவிற்கு நான் வெற்றிபெறவில்லை என்றே உணர்கிறேன்.

ஸ்ரீல பிரபுபாதரின் கட்டளையை ஏற்று, நான் எனது 29 வயது முதல் தீட்சை அளிக்கத் தொடங்கினேன். தீட்சை பெறும் வேளையில், சீடர் குறைந்தபட்சம் 16 சுற்றுகள் நாமஜபம் செய்வதாகவும், நான்கு ஒழுக்க விதிமுறைகளை கடைப்பிடிப்பதாகவும் உறுதிமொழி ஏற்கிறார்; அதே சமயத்தில், குருவும் பகவான் முன்னிலையில் அந்த ஆத்மாவை மீண்டும் பகவானின் திருநாட்டிற்கு அழைத்து வருவதாக உறுதி ஏற்கிறார். எனவே, பலருக்கு தீட்சை அளித்து அவைகளை சீடர்களாக ஏற்றுக்கொள்வது மட்டுமல்லாமல், அவர்களை கவனத்துடன் பாதுகாத்து, அவர்கள் அனைவரும் மீண்டும் பகவானின் திருநாட்டை சென்றடைவதை நான் உறுதிசெய்ய வேண்டும். தீட்சை அளித்தல் என்பது எளிமையானதுதான்; ஆனால், அது வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு பொறுப்பாகும். எனவே, உங்கள் பக்தித் தொண்டில் நீங்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு, எனக்கு நீங்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் அனைவரும் பக்தியின் ரதி நிலைக்கு முன்னேற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; மேலும், உங்களில் சிலர் கிருஷ்ண-ப்ரேமையை அடைவீர்கள் என்று நம்புகிறேன். ஒவ்வொரு பக்தரும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜபிப்பதிலும், ஒழுக்க விதிமுறைகளை கடைபிடிப்பதிலும் மிகவும் உறுதியுடன் இருந்து பகவானின் திருநாட்டை சென்றடைய வேண்டும் என்பதே எங்களின் விருப்பமாகும்.

ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தின் புகழை எடுத்துரைக்கும் பல பதங்களை நான் படித்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு பதம் என்ன கூறியது என்றால், நாம் காயத்ரி மந்திரத்தை ஜபிப்பது போலவே – காலை, நண்பகல் மற்றும் மாலை ஆகிய மூன்று சந்தியா வேளைகளிலும், தலா ஒரு சுற்று வீதம் மொத்தம் மூன்று சுற்றுகள் நாமஜபம் செய்ய வேண்டும். ஹரிநாம தீட்சை பெற்ற பக்தர்கள் அனைவரும், அவர்கள் காயத்ரி மந்திர தீட்சை பெரும் வரை, இந்த மூன்று சந்தியா வேளைகளிலும் குறைத்தது ஒரு சுற்று நாமஜபம் செய்ய வேண்டும் என்று நான் ஊக்குவிக்கிறேன்.

“ஒருவரால் இயன்ற அளவிற்கு – அதாவது ஒருநாளைக்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று முறையோ, அல்லது வாழ்நாள் முழுவதுமோ – யாரொருவர் நாமஜபம் செய்கிறாரோ அவர் நாய் இறைச்சி உண்பவனாகவே இருந்தாலும், எவ்வித சந்தேகமும் இன்றி வெகுவிரைவில் அவர் எனது பக்தராகிவிடுவார்” (வாயு புராணம், அத்தியாயம் 14: நிலவு போன்ற கௌராங்கரின் தோற்றம், பதம் 38)

“ஒரு சாதாரண மரணத்திற்கு உட்பட்ட மனிதன், தன்னடக்கத்துடன் ஒழுக்க விதிமுறைகளை சரியாக கடைப்பிடித்து, தினமும் மூன்று சந்தியா காலங்களிலும் (விடியற்காலை, நண்பகல் மற்றும் அந்திவேளை) ஜபம் செய்தால் அவன் அஸ்வமேத யாகம் செய்ததற்கு சமமான பலனை பெறுவான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.” (பத்ம புராணம், பூமி காண்டம், அத்தியாயம் 87: விஷ்ணுவின் நூறு திருநாமங்கள், பதம் 27.

நான் எப்போதும், ஒவ்வொரு கணமும் ஜெபம் செய்து கொண்டிருக்கிறேன். நாள் முழுவதும் நான் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தாலும், அந்தப் பணிகளுடன் கூடவே எப்போதும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜெபிக்கிறேன். நான் கழிவறைக்குச் செல்லும் போது கூட, எனது விரல்களைக் கொண்டு ஜெபிக்கிறேன். நான் எல்லா நேரங்களிலும் ஜெபிக்கிறேன். 16 மாலைகள் ஜெபிப்பது கடினமான ஒன்றல்ல. நாம் ஓரிடத்தில் அமர்ந்து முறைப்படி மட்டுமே ஜெபிக்க வேண்டும் என்பதில்லை, எல்லா நேரங்களிலும் ஜெபிக்க முடியும். நாம் குறைந்தது 16 மாலைகளாவது ஜெபிக்க வேண்டும். இதையே ஸ்ரீல பிரபுபாதா கூறியுள்ளார். நாம் இடைவிடாது ஜெபிக்க வேண்டும், எப்போதும் கிருஷ்ணரைப் பற்றியே சிந்திக்க வேண்டும்.

மேலும், எனது சீடர்கள் ஒவ்வொருவரும் ஒரு வருடத்தில் எத்தனை புதியவர்களை ஜெபம் செய்ய வைப்பார்கள், ஒரு மாதத்தில் எத்தனை பேரை ஈடுபடுத்துவார்கள், மற்றும் ஒரு வருடத்தில் எத்தனை பேர் பக்தி சேவையில் முழுமையாகத் தங்களை அர்ப்பணிப்பார்கள் என்பதைப் பற்றி ஒரு உறுதிமொழியை எடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

ஸ்ரீல பிரபுபாதருக்குத் தொண்டு செய்வதற்கும் பிரச்சாரம் செய்வதற்கும் நான் நவீன தொழில்நுட்பங்கள் அனைத்தையும் பயன்படுத்த முயன்று வருகிறேன். தற்போது எனது அறையில் இரண்டு திறன் பலகைகளை (smartboards) நிறுவியுள்ளேன். எனவே, வாரத்தின் சில நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்த விரும்புகிறேன். எனக்கு பல்வேறு மண்டலங்களின்xx பொறுப்புகளும், உலகம் முழுவதும் சீடர்களும் உள்ளனர். எனவே, ஒவ்வொருவரும் வாரத்திற்கு ஒரு வகுப்பிலாவது கலந்துகொள்ளும் வகையில் வெவ்வேறு நேரங்களில் வகுப்புகளை நடத்த விரும்புகிறேன்.

நான் தினமும் எடுக்கும் வகுப்புகளின் நேரம் தூரக் கிழக்கு நாடுகளில் (Far East) உள்ள பக்தர்களுக்குத் தாமதமாக இருக்கலாம். எனவே, அவர்களால் நேரலையில் (live) பார்க்க முடியாதபோது, எனது அலைவரிசையின் (channel) மூலம் பின்னர் பார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் அதிகமான பக்தர்கள் என்னுடன் இணைய முடியும்.

பக்தர்கள் ஒருவருக்கொருவர் காட்டும் ஒத்துழைப்பே குருவின் மீதான உண்மையான அன்பிற்கான சான்று என்று ஸ்ரீல பிரபுபாதர் கூறியுள்ளார். எனவே, பக்தர்கள் தனித்தனியாகச் செயல்படாமல், கூட்டுறவு உணர்வுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். யாராவது சிறப்பாகச் செயல்படும்போது, அதிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொண்டு, அதை நமது சேவையிலும் செயல்படுத்த வேண்டும். பக்தர்கள் இஸ்கானிலேயே தங்கியிருந்து, உயர்மட்ட குழு, உள்ளூர் நிர்வாகிகள், கோயில் தலைவர்கள் போன்றவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

ஸ்ரீல பிரபுபாதரின் விருப்பத்தை நிறைவேற்ற நாங்கள் விரும்புகிறோம். ஸ்ரீல பிரபுபாதரின் கோரிக்கைக்குத் தேவையானவற்றைத் துடிப்பாகச் செய்ய நாங்கள் விரும்புகிறோம்.

நீங்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடனும், பேரின்பமான கிருஷ்ண உணர்வுடனும் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

உங்கள் நலனை எப்போதும் விரும்பும்
ஜெயபதாக ஸ்வாமி