
எனது அன்பான தீட்சை பெற்ற , அடைக்கலம் பெற்ற , தீட்சை பெற ஆர்வமுள்ள , சிக்ஷா சீடர்கள், பேர சீடர்கள் மற்றும் நலம் விரும்புபவர்களே,
எனது ஆசீர்வாதங்கள், வாழ்த்துக்கள் மற்றும் பிரணாமங்களை பொருத்தமான படி ஏற்றுக்கொள்ளுங்கள்.
ஸ்ரீல பிரபுபாதருக்கு எல்லா புகழும் உரித்தாகுக.
வசிப்பிடம்: ஸ்ரீ மாயாப்பூர் சந்திரோதய ஆலயம்.
முகாம்: கோலாலம்பூர்
தேதி: 19 மார்ச் 2026
சிறப்புச் செய்திகள்
ஸ்ரீ மாயாபூர் தாமத்தில் நடைபெற்ற வியாச பூஜைக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, இஸ்கான் இந்தியப் பணியக (India Bureau) கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நாங்கள் மும்பைக்குப் பயணம் செய்தோம். கடந்த டிசம்பர் மாதம் நான் மும்பைக்குச் சென்றிருந்தபோது, இஸ்கான் கார்கர் ஆலயத்தில் தங்கியிருந்தேன்; அப்போது ஜூஹுவில் உள்ள பக்தர்களிடம், ஏப்ரல் மாதத்தில் நான் இஸ்கான் ஜூஹு ஆலயத்தில் தங்குவதாக உறுதியளித்திருந்தேன். எனவே, இம்முறை நான் இஸ்கான் ஜூஹு ஆலயத்தில் ஒரு வாரம் தங்கியிருந்தேன். அங்கு நான் வகுப்புகளை நடத்தினேன்; மேலும், ஒரு தீக்ஷை வழங்கும் விழாவும் நடைபெற்றது.
ஏப்ரல் 7-ஆம் தேதி, மும்பையிலிருந்து நாங்கள் இஸ்கான் விசாகப்பட்டினத்திற்குப் பயணம் செய்தோம்; ஏனெனில், அங்கு அவர்கள் சில ஆன்மீகப் பிரச்சார நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர். எனது அன்பிற்குரிய சீடர்களான சாம்ப தாஸ் அதிகாரி மற்றும் நித்தாய் சேவினி தேவி தாஸி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், அக்கோயிலின் வளர்ச்சியையும், அங்கு நடைபெற்று வந்த பல்வேறு பிரச்சாரச் செயல்பாடுகளையும் காண்பது மிகவும் ஊக்கமளிப்பதாக அமைந்தது. அவர்கள் (EIDC)கிழக்கு இந்தியப் பிராந்திய சபைக்காக ஒரு பிரம்மச்சாரி சங்கோற்சவத்தை நடத்தினார்கள்; எனவே, இரண்டு வெவ்வேறு தருணங்களில் நான் அவர்களிடம் உரையாற்றினேன். மேலும், அங்கு நகர சங்கீர்த்தனமும், ‘பஜன் கிளப்பிங்’ (Bhajan Clubbing) நிகழ்ச்சியும் நடைபெற்றன.
ஏப்ரல் 11-ஆம் தேதி நாங்கள் சென்னைக்குப் பயணம் செய்தோம்; பின்னர் ஏப்ரல் 15-ஆம் தேதி, ஸ்ரீ ராதா கிருஷ்ணரின் திருவிக்கிரகங்களை பிரதிஷ்டை செய்யும் விழாவிற்காக கோலாலம்பூருக்குப் பயணம் செய்தோம்.
நான் விசாகப்பட்டினம் மற்றும் சென்னை ஆகிய இரண்டு இடங்களிலும் நடந்த “பஜன் கிளப்பிங்” நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். இது இந்தியா முழுவதிலும் நடைபெற்று வருகிறது. மும்பையிலும் இதே போன்ற ஒரு நிகழ்ச்சி நடந்தது. ஆக சிலர் மஹா மந்திரத்தை உச்சரிக்கிறார்கள், மற்றவர்கள் நடனமாடிப் பாடுகிறார்கள். அவர்கள் தங்கள் கீர்த்தனைக்கு மேற்கத்திய இசைக்கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள். பௌதிகவாதிகள் கூட அதைச் செய்கிறார்கள். மக்கள் பணம் கொடுத்து பரவசத்தில் மஹா மந்திரத்தை உச்சரிக்கவும் நடனமாடவும் வருவதைப் பார்ப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. விசாகப்பட்டினத்தில் 2,000க்கும் மேற்பட்டோரும், சென்னையில் 1,850 பேரும் நிகழ்ச்சிக்குப் பணம் செலுத்தி ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரித்து, நடனமாடி, பிரசாதம் பெற்றுக்கொண்டு கலந்துகொண்டனர்.
நாம் மிகவும் ஆபத்தான காலகட்டத்தில் இருக்கிறோம். நாம் மேற்கு ஆசியப் போரில் இருக்கிறோம். இந்த வகையான கூட்டு புனித நாம ஜபம் தான் ஒரே நம்பிக்கை. நாமாம்ருதத்தின் 20-வது அத்தியாயத்தில் புனித நாமத்தை கூட்டாக உச்சரிப்பதன் மூலம் குற்றமயமாக்கலைத் தடுத்து நிறுத்த முடியும் என்று நான் படித்தேன்!
நான் மிகவும் பரபரப்பான கால அட்டவணையை பின்பற்றிக் கொண்டிருப்பதாக எனது மருத்துவக் குழுவினர் கூறுகிறார்கள். நான் செயலற்று இருக்க விரும்பவில்லை என்றும், ஆனால் எனது பிரசாரத்தையும் சிகிச்சைகளையும் சமநிலையில் கையாள விரும்புகிறேன் என்றும் நான் அவர்களிடம் கூறினேன்.
ஸ்ரீல பிரபுபாதரின் செய்தி
ஸ்ரீல பிரபுபாதர், பல இடங்களில், ஒரு ஆன்மீக குருவின் கடமைகளைக் குறிப்பிடுகிறார். ஸ்ரீமத் பாகவதம் பதம் 5.5.18-க்கான தனது பொருளுரையில், ஒருவரால் தனது சீடரை பிறப்பு-இறப்பு சுழற்சியிலிருந்து காப்பாற்ற முடியாவிட்டால், அவர் ஆன்மீக குருவாக ஆகக்கூடாது என்று அவர் எழுதியுள்ளார்.
“தன்னைச் சார்ந்தவர்களை பிறப்பு-இறப்பு சுழற்சியிலிருந்து விடுவிக்க முடியாத ஒருவர் – ஆன்மீக குருவாகவோ, தந்தையாகவோ, கணவனாகவோ, தாயாகவோ அல்லது வழிபடத்தக்க தேவராகவோ ஒருபோதும் ஆகக்கூடாது.” (ஸ்ரீமத் பாகவதம் 5.5.18)
தீட்சை அளிப்பதற்கு முன்பே, ஒரு சீடர் பக்தித் தொண்டில் எவ்வளவு தீவிரமாக ஈடுபட விரும்புகிறார் என்பதைச் சோதிப்பதும், பின்னர் அவரை முறையான பக்தித் தொண்டுகளில் ஈடுபடுத்துவதும் ஆன்மீக குருவின் கடமையாகும்.
“ஒரு சீடர் ஆன்மீக வாழ்வில் மிகச் சிறப்பாக முன்னேறும் போது, அது ஆன்மீக குருவை மகிழ்விக்கிறது. மேலும் அது அந்த ஆன்மீக குருவை, ‘என் சீடன் எவ்வளவு வெற்றி பெற்று இருக்கிறான்!’ என்று எண்ணிப் பரவசத்துடன் புன்னகைக்க வைக்கிறது. எழுந்து நிற்கவோ அல்லது தவழவோ முயற்சி செய்யும் தனது குழந்தையை கண்டு ஆனந்தமடையும் பெற்றோரைப் போலவே, குருவும் தனது சீடனின் முன்னேற்றத்தைக் கண்டு ஆனந்தத்துடன் புன்னகைக்கிறார். “(ஸ்ரீ சைதன்யசரிதாம்ருதம், ஆதி-லீலை 7.82, பொருளுரை).
எனது செய்தி
ஸ்ரீல பிரபுபாதர் என்னிடம் 50,000 சீடர்களை உருவாக்குமாறு கேட்டுக் கொண்டதைப் பற்றி நான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஸ்ரீல பிரபுபாதர் அதை கூறியபோது, அது ஓரளவிற்கு எளிதாகத் தெரிந்தது. ஆனால், உண்மையில் அவர்களைப் பிறப்பு மற்றும் இறப்பின் சுழற்சியிலிருந்து விடுவிக்கும் பொறுப்பு மிகவும் சிக்கலானது மற்றும் பாரமானது என்பதை உணர்கிறேன்.”
என்னிடம் தீட்சை பெற்ற அத்தனை பக்தர்களையும், அல்லது அதற்கும் அதிகமானவர்களையும் கரையேற்ற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த எண்ணமே என்னை இரவில் உறங்கவிடாமல் செய்கிறது. அனைவரும் உய்வடைவதை நான் காண விரும்புகிறேன். இந்த வாழ்வின் இறுதியில் அனைவரும் சைதன்ய மஹாபிரபு மற்றும் பகவான் கிருஷ்ணரின் தாமரைத் திருவடிகளை அடைய வேண்டும் என்று விரும்புகிறேன்.
அதற்கான பல்வேறு வழிகளைப் பற்றி நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் என்னைப் பின்பற்றி, இந்த கருத்துக்களைச் செயல்படுத்தி, கிருஷ்ண உணர்வில் நிலைத்திருக்க வேண்டும். பக்தித் தொண்டில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு, சிறந்த வைஷ்ணவ-வைஷ்ணவிகளாகவும், யோகி-யோகினிகளாகவும் திகழ வேண்டும். மாயைக்கு எதிராகப் போராட நாம் பக்தி யோகத்தைப் பயன்படுத்துகிறோம். நாம் ஒரு போர்க்களத்தில் இருக்கிறோம், இந்தத் தொண்டை நாம் மிகவும் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும்.
நாமம் ஜெபிப்பது, கைங்கர்யங்கள் செய்வது, நிதி உதவி, ஒத்துழைப்பு, இஸ்கான் அமைப்பில் இணைந்திருப்பது எனப் பல்வேறு விஷயங்களைச் செய்ய வேண்டும். இதைப்பற்றி எனது சமீபத்திய வியாஸ பூஜையின் போது நான் உரையாற்றிக்கொண்டிருந்தேன். பக்தர்கள் இன்னும் சிறந்த முறையில் எவ்வாறு கிருஷ்ண உணர்வை வளர்த்துக்கொள்வது, இந்த வாழ்விலேயே அவர்கள் எப்படி கிருஷ்ணரை அடைவது என்பது குறித்தே நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், இதை அடைவதற்கு நீங்கள் அனைவரும் மிகவும் தீவிரமாக இருக்க வேண்டும்.
இதை நான் மட்டுமே செய்துவிட முடியாது. நீங்கள் தான் நிறைவேற்ற வேண்டும். நீங்கள் நாமம் ஜெபிக்க வேண்டும். சேவை செய்ய வேண்டும், ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களைப் படிக்க வேண்டும், உங்களை நீங்கள் முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும். ஒவ்வொரு சீடரும், மற்றும் பிறரும் கூட, பிறப்பு மற்றும் இறப்பின் சுழற்சியிலிருந்து விடுபடுவதைக் காண்பதே நான் விரும்பும் மிக முக்கியமான சேவையாகும். அவர்கள் ஆன்மீக உலகை, பகவான் கிருஷ்ணரின் தாமரைத் திருவடிகளைச் சென்றடைய வேண்டும். எனவே, சைதன்ய மஹாபிரபுவின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள், ஸ்ரீல பிரபுபாதர் கூறியபடி இந்த இயக்கத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளுங்கள்; இந்த வாழ்விலேயே நீங்கள் கிருஷ்ண லோகத்திற்குத் திரும்பிச் செல்வீர்கள்.
இந்த வாழ்விலேயே கிருஷ்ண உணர்வைப் பெறுவதில் ஒவ்வொரு சீடரின் தீவிரத்தையும் நான் ஆராய வேண்டும்; ஆனால், நான் உள்ளூர் தலைவர்களின் பரிந்துரைகளையே நம்பியிருக்கிறேன். அதுமட்டுமின்றி, நீங்கள் அனைவரும் என்னைப் பின்பற்ற வேண்டும்; நான் உங்களை ஆன்மீக ரீதியாகக் கரையேற்றுவதற்கு அது மிகவும் அவசியமானதாகும்.
உத்வேகம் தரும் கதைகள்
நான் இஸ்கான் விசாகப்பட்டினத்திற்குச் சென்றிருந்தபோது, சாம்ப தாஸ அதிகாரி மற்றும் நித்தாய் செவினி தேவி தாஸி ஆகியோரின் சேவைகளைப் பார்த்தபோது, கிருஷ்ண பக்தி கொண்ட கணவனும் மனைவியும் எவ்வாறு இஸ்கானிற்காக இவ்வளவு சேவை செய்ய முடியும் என்பதை பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். அவர்கள் இருவரும் அளப்பரிய சேவைகளை செய்து வருகின்றனர். நித்தாய் செவினி தேவி தாஸி, ஐந்து மொழிகளில் பிரச்சாரம் செய்கிறார், கோவிலை நடத்துவதில் தனது கணவருக்கு உதவுகிறார், மேலும் அவர் தனது PhD மற்றும் பக்திவேதாந்த பட்டங்களையும் பெற்றிருக்கிறார். மேலும் அவர் “டிவைன் டச் ” பள்ளியின் நிறுவனர் மற்றும் முதல்வர் ஆவார். ஆகையால் கோவில் நிர்வாக அதிபரின் மனைவி மட்டுமல்லாது இந்தக் கல்விச் சேவையையும் அவர் செய்து வருகிறார் மற்றும் சில புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். சாம்ப தாஸ் தனது பக்தி-வைபவ பட்டத்தை பெற்றிருக்கிறார், மேலும் அவர் தனது பக்தி-வேதாந்த பட்டத்தை தற்பொழுது நிறைவு செய்ய போகிறார். எனவே கிருஷ்ண உணர்வுள்ள கணவனும் மனைவியும் இணைந்து இவ்வளவு சேவைகளை எவ்வாறு செய்ய முடியும் என்பதைப் பார்ப்பதற்கு மிகுந்த ஊக்கமளிக்கிறது.
நீங்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடனும் பேரின்பமான கிருஷ்ண உணர்வுடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்
உங்கள் நலனை எப்போதும் விரும்பும் ஜெயபதாக சுவாமி
ஜேபிஎஸ்/ஆர்ஆர்எஸ்டிபி