எனது அன்பான தீட்சை பெற்ற , அடைக்கலம் பெற்ற , தீட்சை பெற ஆர்வமுள்ள , சிக்ஷா சீடர்கள், பேர சீடர்கள் மற்றும் நலம் விரும்புபவர்களே,

எனது ஆசீர்வாதங்கள், வாழ்த்துக்கள், பிரணாமங்களை பொருத்தமான படி ஏற்றுக்கொள்ளுங்கள்.

ஸ்ரீல பிரபுபாதருக்கு எல்லா புகழும் உரித்தாகுக.

எனது இருப்பிடத்திலிருந்து எழுதப்பட்டது: ஸ்ரீ மாயாபூர் சந்திரோதய ஆலயம்.

தேதி: 17 பிப்ரவரி 2026

முக்கிய அம்சங்கள்

இப்போது, கௌர பூர்ணிமா விழா நடக்கும் சமயம், இந்த நேரத்தில் உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்கள் ஸ்ரீ மாயாபூருக்கு வர வேண்டும் என்று ஸ்ரீல பிரபுபாதர் விரும்பினார். பிப்ரவரி 13 ஆம் தேதி, விஜய ஏகாதசி அன்று, கொடி (கருட-த்வஜ) ஏற்றத்துடன் நாங்கள் விழாவைத் தொடக்கி வைத்தோம். அதற்கு முன், பிப்ரவரி 4 முதல் 14 வரை உயர் மட்ட குழு (ஜிபிசி) வருடாந்திர பொதுக்குழு கூட்டமும் பிற கூட்டங்களும் நடந்தன.

1977 ஆம் ஆண்டு, ஸ்ரீல பிரபுபாதர் என்னை உயர் மட்டக் குழு உறுப்பினராக (ஜிபிசியாக) பரிந்துரைத்தார். எனவே அந்த ஆண்டில், நான் எனது முதல் உயர் மட்ட குழு (ஜிபிசி) கூட்டத்தில் கலந்து கொண்டேன். அந்த நேரத்தில், எனது மண்டலத்தில், கிழக்கு இந்தியா, வங்காளம், பங்களாதேஷ் மற்றும் ஒரிசா மட்டுமே இருந்தது. ஸ்ரீல பிரபுபாதரால் நியமிக்கப்பட்ட கடைசி ஜிபிசி நான் என்று நினைக்கிறேன்.

எனக்கு வாரத்தில் மூன்று நாட்கள் சிறுநீர் பிரித்தல் சிகிச்சை (டயாலிசிஸ்) செய்யப்படுகிறது, வழக்கமாக காலையில் அதைச் செய்கிறேன். ஆனால், உயர் மட்ட குழு (ஜிபிசி) கூட்டங்களின் காலை அமர்வுகளில் நேரில் கலந்துகொள்ளவதற்காக, எனது சிறுநீர் பிரித்தல் சிகிச்சையை (டயாலிசிஸ்) மதியம் செய்யுமாறு மாற்றினேன். சிறுநீர் பிரித்தல் சிகிச்சை (டயாலிசிஸ்) செய்துகொண்டே உயர் மட்ட குழுவின் (ஜிபிசி) மதிய அமர்வுகளில் நிகழ் நிலையில் கலந்துகொண்டேன். எனக்கு பல உடல் நல சவால்கள் உள்ளன, ஆனால் ஸ்ரீல பிரபுபாதருக்கு எனது சேவைகளை நிறைவேற்ற முயற்சிக்கிறேன். எனவே பல்வேறு கூட்டங்களில் பங்கேற்கவும் பல்வேறு சேவைகளைச் செய்யவும் நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன்.

அதன் பிறகு ஸ்ரவண-உத்சவம், வேத கோளறங்க கோயில் (TOVP) யக்ஞ-சாலை தொடக்க விழா, கீர்த்தனை-மேளா மற்றும் சங்கீர்த்தன விருதுகள் வழங்குதல் போன்றவை இருந்தன. நாளை நவத்வீப-மண்டல-பரிக்கிரமத்திற்கான ஆதிவாஸ் நிகழ்ச்சி நடைபெறும். நான் தீவிர சிகிச்சையில் இருந்ததால், தொற்று அபாயத்தைக் குறைக்க நெரிசலான இடங்களைத் தவிர்க்க வேண்டும் என்று என் மருத்துவர்கள் அறிவுறுத்தினர் ,எனவே நான் சில நிகழ்ச்சிகளில் நிகழ்நிலையில் கலந்து கொண்டேன், சிலவற்றில் நான் நேரடியாகவும் பங்கேற்றேன்.

ஸ்ரீல பிரபுபாதரின் செய்தி

நமது நலனுக்காக புத்தகங்களை மொழிபெயர்க்க ஸ்ரீல பிரபுபாதர் எவ்வளவு சிரமப்பட்டார் என்பதை நான் நேரில் கண்டுள்ளேன். சில சமயங்களில் அவர் நள்ளிரவு அல்லது அதிகாலை 1 அல்லது 2 மணிக்கு என்னை அழைப்பார், நான் அவரது அறைக்குச் சென்றபோது அவர் புத்தகங்களை மொழிபெயர்ப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஸ்ரீல பிரபுபாதர் தனது சீடர்கள் தனது புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
“பிரசாரம் செய்யாமல், தத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல், உங்கள் பலத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது. நாம் முன்வைக்கும் தத்துவத்தை அனைவரும் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும்… அதாவது நீங்கள் ஒவ்வொரு நாளும் முழுமையாகப் படிக்க வேண்டும்.” காலை நடைப்பயிற்சி, டிசம்பர் 12, 1973, லாஸ் ஏஞ்சல்ஸ்

“எனது அனைத்து மாணவர்களும் எனது புத்தகங்களை தினந்தோறும் தவறாமல் மிகவும் தீவிரமாகப் படிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு உங்கள் மனம் தினமும் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு மணிநேரம் ஸ்ரீமத்-பாகவதம், பகவத்-கீதை மற்றும் பிற திவ்யமான புத்தகங்களைப் படிப்பதில் மூழ்கிவிட்டால் நீங்கள் மிக எளிதாக கிருஷ்ண உணர்வில் முன்னேறுவீர்கள்.” பார்கவாவுக்கு எழுதிய கடிதம், ஜூன் 13, 1972, லாஸ் ஏஞ்சல்ஸ்

“தினமும் 16 சுற்றுகள் ஜபிப்பதோடு மட்டுமல்லாமல், நாம் அனைவரும் பகவத் கீதையின் குறைந்தது ஒரு அத்தியாயத்தையாவது படிக்க வேண்டும். ஒரு நாள் ஒரு அத்தியாயத்தைப் படித்துவிட்டு, அடுத்த நாள் அடுத்த அத்தியாயத்திற்குச் செல்லுங்கள், இந்த வழியில் 18 நாட்களுக்குப் பிறகு ஒரு வாசிப்பை முடித்திருப்போம். நான்கு அல்லது ஐந்து முழுமையான வாசிப்புக்குப் பிறகு ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் புத்தகத்தை உள்ளது உள்ளபடி அறிந்துகொள்வோம், மேலும் நம்முடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு பதில்கள் கிடைக்கும். நாங்கள் இந்தப் புத்தகங்களை பணத்திற்காக அல்ல, ஆனால் அனைத்து பக்தர்களும் படித்துப் புரிந்துகொள்வதற்காக அச்சிடுகிறோம்.
அடுத்த செப்டம்பரில், ஜன்மாஷ்டமி நாளில் விருப்பமுள்ள மாணவர்கள் பகவத் கீதையில் தேர்வெழுதலாம். தேர்ச்சி பெறுபவர்களுக்கு அதிகாரப்பூர்வமான ‘பக்தி சாஸ்திரி’ என்ற சான்றிதழும் பட்டமும் கிடைக்கும்.” அனைத்து கோயில்களுக்குமான சுற்றறிக்கை: நியூயார்க், நவம்பர் 24, 1968

“நம்மிடம் எந்த புத்தகங்கள் இருந்தாலும் அதைப் படிக்க வேண்டும். பக்தி-சாஸ்திரி என்றால் பக்தி ரசாமிர்த சிந்து, பகவத்-கீதை, உபதேசாமிர்தம், மரணத்திற்கு அப்பால் – இந்த வழியில் நாம் பத்து புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கிறோம். அதுதான் பக்தி-சாஸ்திரி. பின்னர் நாம் பாகவதத்திற்கு வருகிறோம், பின்னர் நாம் சைதன்ய-சரிதாமருதம் படிக்கிறோம், இவ்வாறாக அடுத்த ஆண்டு முதல் ஒருவர் பக்தி-சாஸ்திரி படிப்பில் தேர்ச்சி பெறாவிட்டால் அவர் இரண்டாவது தீட்சை பெற முடியாது.” காலை நடைப்பயணம், ஜனவரி 6, 1976, நெல்லூர்.

எனது செய்தி

நான் ஸ்ரீல பிரபுபாதரின் அனைத்து புத்தகங்களையும் பலமுறை படித்திருக்கிறேன், ஆனால் அவற்றை முறையாகப் படித்து பட்டங்களைப் பெறவும் விரும்பினேன். எனவே கடந்த வாரம், எனக்கு பக்தி-ஸார்வபௌம பட்டம் வழங்கப்பட்டது, மேலும் எனது சீடர்கள் அனைவரும் புத்தகங்களைப் படித்து பட்டங்களைப் பெற்று ஆன்மீகத் தகுதிகளைப் பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

ஸ்ரீல பிரபுபாதர் ஏற்படுத்திய பாடத்திட்ட முறை என்னவென்றால், பக்தி-சாஸ்திரி படிப்பிற்கு பகவத்கீதை, பக்தி ரஸாம்ருத சிந்து, உபதேசாம்ருதம் மற்றும் ஸ்ரீ ஈஷோபநிஷத் ஆகியவற்றை ஒருவர் படிக்க வேண்டும்.

அதற்கு அடுத்ததாக:

•பக்தி-வைபவம் : ஸ்ரீமத் பாகவதத்தின் முதல் 6 காண்டங்களை படித்தல்.
•பக்தி-வேதாந்தம் : ஸ்ரீமத் பாகவதத்தின் 7 முதல் 12 வரையிலான காண்டங்களை படித்தல்.
•பக்தி-ஸர்வபௌம : ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தை முழுமையாக படித்தல்.

உயர்மட்டக் குழு கூட்டங்களின் போது, அருள்திரு வைசேஷிக பிரபு மற்றும் சைதன்ய சந்திர சரண பிரபு ஆகியோருக்கு பக்தி-வேதாந்த பட்டம் வழங்கப்பட்டது. ஸ்ரீல பிரபுபாதரின் சீடர்களும் இதர மூத்த பக்தர்களும் இவ்விதமாக சிறந்து திகழ்வதைப் பார்ப்பது மிகவும் ஊக்கமளிக்கிறது.

நான் இஸ்கான் கார்கர் சென்றிருந்தபோது, அங்கிருக்கும் பக்திவேதாந்த வேதக் கல்விக்கல்லூரியில் தற்போது சுமார் 250 பக்தர்கள் பக்தி-சாஸ்திரி படிப்பை மேற்கொண்டு வருவதாகக் கூறப்பட்டது. முறையான படிப்புகள் தவிர, தொகுப்புத் தேர்வுகளை (Summative tests) எழுதுவதன் மூலமாகவும் ஒருவர் இந்தப் பட்டங்களைப் பெற முடியும். 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் நிர்வாகப் பொறுப்புகளில் இருப்பவர்கள், வேத நூல்களில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தால், இந்தத் தேர்வுகளை எழுதலாம்.

ஸ்ரீல பிரபுபாதர் இதையே விரும்பினார். மக்கள் தனது புத்தகங்களைப் படித்து, அவற்றில் புலமை பெற வேண்டும் என்று அவர் விரும்பினார். நாம் ஒரு வழக்கறிஞரைப் போல இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், சொல் ஒவ்வொன்றும் சாது, சாஸ்திரம் மற்றும் குரு ஆகியவற்றின் ஆதாரத்தைக் கொண்டிருக்க வேண்டும்.

உத்வேகக் கதைகள்

கோயம்புத்தூர் இஸ்கான் பக்தர்கள் தங்களது “கீதாதான்” நிகழ்ச்சி குறித்த அறிக்கையை எனக்கு அனுப்பியுள்ளனர். இது தவத்திரு பக்தி வினோத ஸ்வாமி அவர்களால் தொலைநோக்குப் பார்வையுடன் உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாகும். வெவ்வேறு பள்ளிகளில் பகவத்கீதையின் அடிப்படையில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டன. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த முயற்சி படிப்படியாக விரிவடைந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2,000 குழந்தைகளைச் சென்றடைந்த இந்தத் திட்டம், இந்த ஆண்டு 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 4,000-க்கும் அதிகமான குழந்தைகளை சென்றடைந்துள்ளது. பங்கேற்ற ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு பகவத்கீதை புத்தகம், கீதாதான் கையேடு (Handbook), மற்றும் ஜப மாலைப் பையோடு கூடிய ஜப மாலை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு தொகுப்பு வழங்கப்பட்டது.

கிழக்கு லண்டன் பக்தி விருக்ஷா பக்தர்கள் மற்றொரு ஊக்கமளிக்கும் புத்தக விநியோக அறிக்கையை எனக்கு அனுப்பியுள்ளனர். கடந்த 11 ஆண்டுகளாகத் தொடர்ந்து, டிசம்பர் தொடர் புத்தக விநியோக காலத்தில் அவர்கள் 10,000-க்கும் அதிகமான பெரிய புத்தகங்களை விநியோகித்து வருகின்றனர். மாதத்திற்கு 10,000 பெரிய புத்தகங்களை விநியோகிக்க வேண்டும் என்று ஸ்ரீல பிரபுபாதர் எனக்கு வழங்கிய அறிவுறுத்தல்களால் ஈர்க்கப்பட்டு இதனைச் செய்வதாக அவர்கள் கூறினர். இந்த ஆண்டு, அவர்கள் மொத்தம் 20,360 புத்தகங்களை விநியோகித்துள்ளனர்.

உலகம் முழுவதும் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் இயக்கத்தை எவ்வாறு விரிவுபடுத்துவது என்பது பற்றியே நான் எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். எனவே, தற்போது பல்வேறு தலைப்புகளில் காணொளிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். எனக்கு உதவ சில பக்தர்கள் முன்வந்துள்ளனர். நீங்கள் காணொளிகளை உருவாக்குவதில் வல்லுநராக இருந்தால், இந்த படிவத்தை – https://form.jotform.com/260391208286054 – பூர்த்தி செய்யலாம். இந்தச் சேவையில் உதவ ஏற்கனவே முன்வந்த அனைத்து பக்தர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் நலனை எப்போதும் விரும்பும்,
ஜெயபதாக ஸ்வாமி

செயல்பாடு, வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடக பக்கங்களுக்கான இணைப்புகள்:

iOS செயலி: https://apps.apple.com/us/app/id967072815

ஆண்ட்ராய்டு செயலி: https://play.google.com/store/apps/details?id=com.jayapatakaswami.jpsapp

அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.jayapatakaswami.com

விரிவுரைகள் (ஆடியோ & டிரான்ஸ்கிரிப்ஷன்): https://jayapatakaswamiarchives.net

YouTube சேனல்: http://youtube.com/jayapatakaswamiofficial

சவுண்ட்கிளவுட் விரிவுரைகள் & கீர்த்தனை: http://www.soundcloud.com/jayapatakaswami

ஃபேஸ்புக்: http://www.facebook.com/Jayapatakaswami

டெலிகிராம் சேனல்: https://t.me/JayapatakaSwami

வாட்ஸ்அப் சேனல்: https://whatsapp.com/channel/0029VaBTu8uIiRoqvPKige0G

இன்ஸ்டாகிராம் பக்கம்: http://www.instagram.com/Jayapatakaswamionline