
எனது அன்பான தீட்சை பெற்ற, அடைக்கலம் பெற்ற , தீட்சை பெற ஆர்வமுள்ள, சிக்ஷா சீடர்கள், பேர சீடர்கள் மற்றும் நலம் விரும்புபவர்களே,
எனது ஆசீர்வாதங்கள், வாழ்த்துக்கள், பிரணாமங்களை பொருத்தமான படி ஏற்றுக்கொள்ளுங்கள்.
ஸ்ரீல பிரபுபாதருக்கு எல்லா புகழும் உரித்தாகுக.
எனது இருப்பிடத்திலிருந்து எழுதப்பட்டது: ஸ்ரீ மாயாபூர் சந்திரோதய ஆலயம்.
தேதி: 3 மார்ச் 2026
சிறப்புச் செய்திகள்
கௌர பூர்ணிமா வாழ்த்துக்கள்! இன்று கௌரப்த 539 வது ஆண்டின் கடைசி நாள். இன்று காலை கௌர பூர்ணிமா திருவிழா பந்தலில் ஒரு வகுப்பை நடத்தினேன். நான் பெங்காலி மற்றும் ஆங்கிலத்தில் பேசினேன், இவ்வளவு வைஷ்ணவர்களையும் வைஷ்ணவிகளையும் பார்த்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். நேற்று இரவு ஸ்ரீல பிரபுபாதர் இணைப்பு நாளில் ஒரு சொற்பொழிவு ஆற்றினேன். மூன்று நாட்களுக்கு முன்பு சாந்திபூர் விழா இருந்தது. எனவே நாங்கள் அங்கு சென்று ஒரு வகுப்பை நடத்தினோம், கிச்சடியையும் விநியோகித்தோம். இந்த திதியில், சாந்திபுரத்தில் பிரசாதம் ஏற்பவருக்கு கோவிந்த பக்தி கிடைக்கும் என்று சைதன்ய மஹாபிரபு கூறியிருக்கிறார்.
நான் ஸ்ரீ மாயாபூரில் இருந்தபோது ஸ்ரீல பிரபுபாதரிடமிருந்து எனக்கு வந்த கடிதங்களில் ஒன்று, நான் ஸ்ரீ மாயாபூரில் தங்குவது மட்டுமல்லாமல், பயணம் செய்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதாகும். உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்து மக்களை ஸ்ரீ மாயாபூர் தாமத்திற்கு அழைத்து வர வேண்டும் என்று அவர் விரும்பினார். இந்த ஆண்டு நவத்வீப மண்டல பரிக்ரமத்தில் 7 வெவ்வேறு குழுக்களாக 16,500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். கடைசி நாளில் அனைத்து குழுக்களுக்கும் மஹா மிலன் நடைபெற்றது. எனவே பல்வேறு பரிக்ரம குழுக்களைச் சேர்ந்த அனைத்து பக்தர்களும் ஒன்று கூடி, ஸ்ரீல பக்திவினோத தாகூரரின் கணிப்பை நிறைவேற்றினர்.
இந்த விழாவின் போது பல பக்தர்கள் ஸ்ரீ மாயாபூருக்கு வருகிறார்கள், மேலும் அவர்கள் என்னை சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். என் உடல் நலம் சரியில்லாத போதும், சிறுநீர் பிரிப்பு சிகிச்சை செய்து உடல் வலியை அனுபவித்த போதிலும், நான் ஒவ்வொரு மாலையும் வகுப்புகளைத் தொடர்ந்தேன். இவ்வாறாக என்னால் கிருஷ்ண-கதையைப் பேசவும், பக்தர்களை நேரில் பார்க்கவும், அவர்களை ஊக்குவிக்கவும், அவர்களின் ஆன்மீக கேள்விகளுக்கு பதிலளிக்கவும் முடிந்தது.
ஸ்ரீல பக்திவினோத தாகூரரின் ஸ்ரீ சைதன்ய சிக்ஷாமிருதம் என்ற புத்தகத்தின் வாசிப்பை நாங்கள் இப்போதுதான் முடித்தோம், மேலும் ஜலதூதா கப்பல் குறித்த ஸ்ரீல பிரபுபாதரின் அமெரிக்கப் பயணத்தின் நாட்குறிப்பைப் படிக்கத் தொடங்கினோம். டிசம்பர் 29, 2023 அன்று ஸ்ரீ சைதன்ய-சிக்ஷாமிருதம் புத்தகத்தின் விளக்கவுரையைப் படிக்கத் தொடங்கினோம். முழு புத்தகத்தையும் 2 ஆண்டுகள் மற்றும் 3 மாதங்களில் முடித்தோம் என்று ஷ்யாமரசிக தாஸ் என்னிடம் கூறினார்! ஆயினும் நிச்சயமாக நாங்கள் அதை தினமும் பிடிக்கவில்லை.
கடந்த வாரம் என் ஆன்மீகச் சகோதரர் தவத்திரு பத்ரி நாராயண ஸ்வாமி இந்த உலகத்தை விட்டார் என்ற மிகவும் சோகமான செய்தி எங்களுக்குக் கிடைத்தது. அவர் திடீரென தனது உடலை நீத்தார். அவர் என்னை விட மூன்று வயது இளையவர். 1987 முதல் உயர் மட்டக் குழுவில் (GBC) நீண்டகாலம் பணியாற்றி மிகவும் அர்ப்பணிப்புள்ள உறுப்பினராக இருந்தார், மேலும் உயர் மட்டக் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார். ஸ்ரீல பிரபுபாதரின் இயக்கத்தை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் விரிவுபடுத்துவது என்பது பற்றி அவர் எப்போதும் யோசித்துக்கொண்டிருந்தார். நிச்சயமாக
அவரது இழப்பு மிகவும் வருத்தத்திற்குரியது.
ஸ்ரீல பிரபுபாதரின் செய்தி
தீக்ஷா குரு ஒருவர் மட்டுமே என்று ஸ்ரீல பிரபுபாதர் கூறியுள்ளார். ஆனால் சிக்ஷா குருவாக பலர் இருக்கலாம். “இரண்டு வகையான ஆன்மீக குருக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஒருவர், பக்தி சேவையில் முழுமையாக மூழ்கியிருக்கும் முக்தி பெற்ற நபர், மற்றொருவர் பொருத்தமான வழிமுறைகளின் மூலம் சீடரின் ஆன்மீக உணர்வை விழிப்படைய செய்பவர். இவ்வாறு, பக்தி விஞ்ஞானத்தில் உள்ள அறிவுரைகள் புறநிலை மற்றும் அகநிலை சார்ந்த வழிகளில் வேறுபடுகின்றன. ஆச்சாரியர் என்ற வார்த்தையின் உண்மையான அர்த்ததை வெளிப்படுத்த, கிருஷ்ணரை வழங்க அதிகாரம் பெற்ற குரு, சீடரை முழு ஆன்மீக அறிவால் வளப்படுத்தி, அதன்மூலம் அவரை பக்தி சேவையின் செயல்பாடுகளுக்கு விழிப்படைய செய்கிறார்.” CC ஆதி 1.47 பொருளுரை.
“தீக்ஷா குரு எப்போதும் அருகில் இருப்பதில்லை. எனவே ஒருவர், ஒரு மேம்பட்ட பக்தரிடமிருந்து அறிவு மற்றும் போதனைகளைப் பெறலாம். அவர் சிக்ஷா-குரு என்று அழைக்கப்படுகிறார். சிக்ஷா-குரு என்றால் அவர் தீக்ஷா-குருவின் போதனைகளுக்கு எதிராக ஏதாவது பேசுகிறார் என்று அர்த்தமல்ல. அத்தகையவர் ஒரு சிக்ஷா-குரு அல்ல. அவர் ஒரு அயோக்கியன்.” பகவத்-கீதை 17.1-3 ஹோனலுலு, ஜூலை 4, 1974
எனது செய்தி
ஸ்ரீல பிரபுபாதர் என்னிடம் 50,000 சீடர்களை உருவாக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் சீடர்களை உருவாக்குவது ஒரு விஷயம், அதே சமயம் தீட்சை பெற்ற சீடர்கள் கிருஷ்ண உணர்வில் முன்னேறுவதையும் நான் பார்க்க விரும்புகிறேன். இதனால்தான் நான் அனைவரும் ஹரே கிருஷ்ண மஹா-மந்திரத்தை கவனத்துடன் ஜபிக்க வேண்டும் என்றும், நான்கு ஒழுங்குமுறை கொள்கைகளைப் பின்பற்றி காயத்ரி மந்திரத்தைப் பெறத் தகுதி பெற வேண்டும் என்றும் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். என்னிடம் தீட்சை பெற்ற பக்தர்களுக்கு நான் பொறுப்பாகின்றேன். மேலும், என்னிடம் வரும் அனைத்து பக்தர்களையும் நான் பராமரிக்க விரும்புகிறேன். ஆனால் அதே நேரத்தில், இளம் பக்தர்களைப் பராமரிக்க எனக்கு பழைய மற்றும் மூத்த பக்தர்களின் உதவி தேவைப்படுகிறது.
ஒருவருக்கு பல சிக்ஷா குருக்கள் இருக்கலாம் என்று ஸ்ரீல பிரபுபாதர் கூறியுள்ளார். சிக்ஷா என்றால் முழுமுதற் கடவுளான கிருஷ்ணரைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் அறிவுரைகள் என்று பொருள், மற்றும் தீட்சை என்பது மந்திரத்தைப் பெறுவதைக் குறிக்கும். எனவே தீக்ஷா குரு என்பவர் ஒரே சமயத்தில் தீக்ஷா மற்றும் சிக்ஷா குருவாகவும் இருக்கிறார். ‘நான் எனது சீடர்களுக்கு தீக்ஷா மற்றும் சிக்ஷா குரு ஆக இருவருமாக இருக்கிறேன்’ என்று ஸ்ரீல பிரபுபாதர் கூறியுள்ளார். குருவுக்கும் கிருஷ்ணருக்கும் சேவை செய்ய பக்தர்களுக்கு அறிவுறுத்துவதில், தீக்ஷா குருவுக்கு உதவியாக மற்ற சிக்ஷா குருக்களும் இருக்கலாம். ஒரு சிக்ஷா குரு உபதேசம் அளிக்கும்போது, அவர் குரு, சாது மற்றும் சாஸ்திரங்களுக்கு உட்பட்ட உபதேசங்களையே வழங்கக் கடமைப்பட்டவர். அவர் தவறான அறிவுரைகளை வழங்கினால், அவரே அதற்குப் பொறுப்பாவார். எனவே, சிக்ஷா குருக்கள் பலராக இருக்கலாம், ஆனால் தீக்ஷா குரு ஒருவராக மட்டுமே இருக்க முடியும். பொதுவாக தீக்ஷா குருவே தீக்ஷா குருவாகவும் சிக்ஷா குருவாகவும் இருப்பார்.
சிக்ஷா குருக்களில் இரண்டு நிலைகள் உள்ளன. ஒருவர் உங்கள் ஆன்மீக குருவைப் போன்ற அதே நிலையில் இருப்பவர், மற்றொருவர் உங்கள் ஆன்மீக வாழ்க்கையில் முன்னேறத் தேவையான பொருத்தமான அறிவுரைகளை வழங்குபவர்.”
எனது சீடர்களில் சிலர் அவர்களது தந்தை மற்றும் தாய் (அவர்கள் பக்தர்களாக இருந்தால்), கோயில் தலைவர்கள், நாமஹட்டா தலைவர்கள், ஆலோசகர்கள், மூத்த பக்தர்கள் மற்றும் பிற குருக்களால் வழிநடத்தப்படுகிறார்கள். எனது அறிவுரைகளுக்கு முரணாக இல்லாத வரை, எனது சீடர்கள் அனைவரும் பல்வேறு சிக்ஷா குருக்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனது சீடர்கள் தங்களது சிக்ஷா குருக்கள் யார் என்பதை எனக்குத் தெரிவிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் இந்த இணைப்பைக் கிளிக் செய்து விவரங்களை அனுப்பலாம்.
https://www.jayapatakaswami.com/e-care-siksa-guru/
நமது ஸ்தாபக ஆச்சார்யரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த ஸ்வாமி பிரபுபாதர், இஸ்கான் அமைப்பில் உள்ள அனைவருக்கும் முதன்மையான சிக்ஷா குரு ஆவார். நான் தீட்சை வழங்குகிறேன், அதோடு உபதேசங்களையும் வழங்குகிறேன். எனவே நான் தீ.க்ஷா மற்றும் சிக்ஷா குருவாக இருக்கிறேன். ஆனால் இயல்பாகவே, மக்களுக்கு மற்ற சிக்ஷா குருக்களும் இருப்பார்கள், எனவே உங்கள் சிக்ஷா குருக்கள் யார் யார் என்பதை நான் அறிய விரும்புகிறேன்.
உத்வேகம் தரும் கதைகள்
டிசம்பர் மாத புத்தக விநியோகத்தைப் பற்றி இஸ்கான் மங்களகிரியிலிருந்து எனக்கு மிகவும் ஊக்கமளிக்கும் அறிக்கை கிடைத்தது. அவர்கள் ஆரம்பத்தில் 8000 புத்தகங்கள் விநியோகிக்க உறுதிமொழி எடுத்திருந்தார்கள். ஆனால் மாத முடிவில் 14,225 புத்தகங்களை விநியோகித்தார்கள். இது கடந்த ஆண்டின் விநியோகத்தை விட இரட்டிப்புக்கும் அதிகம்.
நான் வழக்கமாக பக்தர்களிடமிருந்து பிரசார அறிக்கைகளைப் பெறுகிறேன். அதில் பல என் மகளிர் சீடர்களிடமிருந்து வருகிறது. அவர்கள் பக்தி-விருட்சங்கள் நடத்துவது, சிறைச்சாலை பிரசாரம் செய்வது, குழந்தைகளுக்கான வகுப்புகள், வாசிப்பு குழுக்கள், புத்தக விநியோகம், கோவில்களில் சமையல் மற்றும் விக்கிரக வழிபாடு செய்வது, கோவில் கணக்குப் பணிகள், வகுப்புகள் எடுப்பது, தெருக்களில் ஹரிநாமம் செய்வது, பிரசாத விநியோகம், வாழ்வுக்கான உணவு போன்ற பல சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கணவர் மற்றும் குடும்பத்திற்கு சேவை செய்வதுடன், இவ்வளவு சேவைகளிலும் ஈடுபடுவது மிகவும் ஊக்கமளிக்கிறது. அவர்கள் சாதாரண பெண்கள் அல்ல — வைஷ்ணவிகள்!
எனக்கு பல யோசனைகள் உள்ளன; நான் பிரசாரம் செய்ய விரும்புகிறேன். தினமும் புதிய யோசனைகள் வருகிறது. ஆனால் இப்போது நான் உடல்நலக் குறைவால் இயலாமையில் இருக்கிறேன்; தெளிவாகப் பேசுவதற்கே சிரமமாக உள்ளது. அதனால் பல்வேறு தலைப்புகளில் காணொளிகள் உருவாக்க முயற்சி செய்கிறேன். கிருஷ்ணர் என்னை இந்த உடலில் எவ்வளவு நாள் வைத்திருப்பார் என எனக்கு தெரியாது. ஆனால் இருக்கும் வரை காலம் சக்தி அனைத்தையும் கிருஷ்ணரின் சிந்தனையிலும் பிரசாரத்திலும் பயன்படுத்த விரும்புகிறேன்.
நாங்கள் சிறிய குழுக்களை அமைத்து, சரியான சித்தாந்தத்துடன் மற்றும் தரத்தையும் பேணிக்காத்துக்கொண்டு வேகமாக பல காணொளிகளை உருவாக்க முயற்சி செய்கிறோம். இதுவரை சுமார் 47 பக்தர்கள் தன்னார்வமாக இணைந்துள்ளனர். சிலர் செயற்கை நுண்ணறிவு காணொளி தயாரிப்பில் புதியவர்கள்; சிலரால் வாரத்திற்கு 2–4 மணிநேரம் மட்டுமே உதவ முடிகிறது —திரைக்கதை உதவி, காட்சியமைப்பு, தொகுப்பு, உதடு ஒத்திசைவு ஒருங்கிணைப்பு அல்லது மதிப்பாய்வு போன்ற பல பகுதிகள் உள்ளன.
செயற்கை நுண்ணறிவு போன்ற சமீபத்திய கருவிகளைப் பயன்படுத்தி காணொளி தயாரிப்பதில் அனுபவமுள்ள பக்தர்களையும், கற்றுக்கொள்ள தயாராக உள்ளவர்களையும், நேரத்தையும் ஆற்றலையும் ஒதுக்க முனைவோர்களையும் தேடுகிறேன். இந்த சேவையில் கலந்து கொள்ள விரும்பினால், இந்த படிவத்தை நிரப்பலாம்:
https://form.jotform.com/260391208286054
என் ஒருங்கிணைப்பாளர்கள் உங்களைத் தொடர்புகொள்வார்கள்.
சைதன்ய மஹாபிரபு மற்றும் நித்தியானந்த பிரபு மிகவும் கருணை வாய்ந்தவர்கள். அவர்களிடம் சக்தி அளிக்க வேண்டி பிரார்த்திக்க வேண்டும். அவர்களின் அருளால் எல்லாம் சாத்தியம் ஆகும்.
நமது புதிய ஆண்டு நாளை தொடங்குகிறது. எனவே உங்கள் அனைவருக்கும் இனிய 540 கௌராப்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
கௌராங்கா!
உங்கள் நலனை எப்போதும் விரும்பும்,
ஜெயபதாக சுவாமி
ஜேபிஎஸ்/ஆர்ஆர்எஸ்டிபி
செயல்பாடு, வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடக பக்கங்களுக்கான இணைப்புகள்:
iOS செயலி: https://apps.apple.com/us/app/id967072815
ஆண்ட்ராய்டு செயலி: https://play.google.com/store/apps/details?id=com.jayapatakaswami.jpsapp
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.jayapatakaswami.com
விரிவுரைகள் (ஆடியோ & டிரான்ஸ்கிரிப்ஷன்): https://jayapatakaswamiarchives.net
YouTube சேனல்: http://youtube.com/jayapatakaswamiofficial
சவுண்ட்கிளவுட் விரிவுரைகள் & கீர்த்தனை: http://www.soundcloud.com/jayapatakaswami
ஃபேஸ்புக்: http://www.facebook.com/Jayapatakaswami
டெலிகிராம் சேனல்: https://t.me/JayapatakaSwami
வாட்ஸ்அப் சேனல்: https://whatsapp.com/channel/0029VaBTu8uIiRoqvPKige0G
இன்ஸ்டாகிராம் பக்கம்: http://www.instagram.com/Jayapatakaswamionline