எனது அன்பான தீட்சை பெற்ற , அடைக்கலம் பெற்ற, தீட்சை பெற ஆர்வமுள்ள, சிக்ஷா சீடர்கள், பேர சீடர்கள் மற்றும் நலம் விரும்புபவர்களே,

எனது ஆசீர்வாதங்கள், வாழ்த்துக்கள், பிரணாமங்களை பொருத்தமான படி ஏற்றுக்கொள்ளுங்கள்.

ஸ்ரீல பிரபுபாதருக்கு எல்லா புகழும் உரித்தாகுக.

வசிப்பிடம்: ஸ்ரீ மாயாபூர் சந்திரோதய ஆலயம்

முகாம்: இஸ்கான் டெல்லி
தேதி: 30 ஏப்ரல் 2026

சிறப்பு செய்திகள்

நரசிம்ம சதுர்த்தசி நல்வாழ்த்துகள்! இன்று இஸ்கான் டெல்லியில், பகவான் நரசிம்ம தேவரின் அவதாரத் திருநாளை நாங்கள் கொண்டாடினோம்.

மலேசியாவிற்கு ஒரு குறுகிய பயணம் மேற்கொண்ட பிறகு, ஏப்ரல் 22-ஆம் தேதி நள்ளிரவில் நாங்கள் டெல்லி வந்து சேர்ந்தோம். கோலாலம்பூரில் உள்ள ஸ்ரீ ஜகந்நாதர் ஆலயத்தில், ‘ராதா கோகுல சந்திரரின்’ திருவிக்கிரகங்களின் பிரதிஷ்டை வைபவம் நடைபெற்றது. அவர்கள் பல ஆண்டுகளாக ஜகந்நாதர், பலதேவர், சுபத்திரை, சுதர்சன சக்கர தேவர் மற்றும் நித்தாய் சுந்தர கௌரஹரி ஆகியோரை வழிபட்டு வந்தனர்; தற்போது ஸ்ரீ ஸ்ரீ ராதா கோகுல சந்திரர் திருவுருவச் சிலைகளையும் அங்கு பிரதிஷ்டை செய்துள்ளனர். அத்திருவிக்கிரகத்திற்கு ‘பிராண பிரதிஷ்டை’ (உயிர் ஊட்டும் சடங்கு) வைபவத்தை நான் முன்னின்று நடத்தினேன்; மேலும், திருவிக்கிரகத்திற்கு திருநாமத்தையும் சூட்டினேன். தவத்திரு. பானு சுவாமி, தவத்திரு. பக்தி விக்ன விநாச நரசிம்ம சுவாமி, அருள்திரு. பிரபா விஷ்ணு பிரபு, தவத்திரு. பக்தி புருஷோத்தம சுவாமி, தவத்திரு. பக்தி முகுந்த சுவாமி, தவத்திரு. பக்தி ஆர்ஜவ ப்ரீதிவர்த்தன சுவாமி மற்றும் பல மூத்த பக்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இதற்கு முந்தைய நாள், அவர்கள் ஹரிநாம சங்கீர்த்தனத்தையும், பிராமண தீக்‌ஷை வழங்கும் வைபவத்தையும் ஏற்பாடு செய்திருந்தனர்; அந்த நிகழ்வுகள் நிறைவடைய நள்ளிரவு ஆகிவிட்டதால், மறுநாள் நடைபெற்ற ‘நேத்ர உன்மீலன’ (திருவிழிகள் திறக்கும்) வைபவத்தில் என்னால் கலந்துகொள்ள இயலவில்லை.

மலேசியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும், மற்றும் பல அண்டை நாடுகளிலிருந்தும் திருவிழாவிற்காக வந்த பக்தர்களை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். மலேசியாவிலிருந்து புறப்படுவதற்கு முந்தைய நாள், நான் இளைஞர்களிடம் உரையாற்றினேன், அதில் அவர்களை மலேசியாவில் பிரச்சாரத்தை விரிவுபடுத்துமாறு ஊக்குவித்தேன். நாங்கள் பஜன் கிளப்பிங் பற்றிய ஒரு காணொளியையும் காண்பித்தோம். அது பாரம்பரிய பஜனையை, இன்றைய புதிய தலைமுறையினருக்கு உகந்த, உயர் ஆற்றல் மிக்க சூழலுடன் கூடிய, நேரடி இசை நிகழ்ச்சியாக நடத்தப்படும் பஜனை முறையாகும்.

இன்று நரசிம்ம சதுர்தசி. பிரஹலாத மஹாராஜர், முதன்முதலில் நரசிம்ம தேவரைக் கண்டபோது, எனது ஆன்மீக குருவின் கருணையால்தான் உங்களை நேரடியாக என்னால் காண முடிந்தது, எனவே நான் எப்பொழுதும் என் ஆன்மீக குருவின் சேவையில் தொடர்ந்து ஈடுபடவேண்டும் என்று பகவான் நரசிம்மரிடம் அவர் பிரார்த்தனை செய்தார்.

நான் அபிஷேக விழாவில் கலந்துகொண்டேன். ஸ்ரீ பிரஹலாத லக்ஷ்மி நரசிம்ஹ தேவர் மிகவும் அழகாக இருந்தார், மேலும் இறைவனுக்கும் அவரது பக்தருக்கும் அபிஷேகம் செய்யப்படுவதைக் காண்பது மிகவும் அற்புதமாக இருந்தது. பரமபுருஷ பகவான் ஆன்மீக உலகத்திலிருந்து வந்து, வீழ்ந்த ஆத்மாக்களை விடுவிக்கிறார், மேலும் தனது பக்தர்களைக் காப்பாற்றுகின்றார். உண்மையில், அவரால் எதையும் செய்ய முடியும். ஆனால் அவர் நமக்கு ஒரு சிறிய அற்புதமான விஷயத்தை மட்டுமே காண்பிக்கின்றார். மேலும் இந்த லீலைகள் அனைத்தும் திவ்யமானவை. அவற்றை நாம் நினைவுகூர்வது, நரசிம்மப் பெருமானை / பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை புகழ்வது போன்ற செயல்கள் நமக்கு மிகப்பெரிய ஆன்மீகப் பலனை தருவதோடு மட்டுமல்லாமல் அவை நம்மை மேன்மேலும் பரிசுத்தப்படுத்துகின்றன.

ஸ்ரீல பிரபுபாதரின் செய்தி

ஒவ்வொரு பக்தரும் இந்தப் பிறவியிலேயே பகவானிடம் திரும்பிச் செல்ல வேண்டும் என்று ஸ்ரீல பிரபுபாதர் விரும்பினார்.

இந்த பௌதிக வாழ்க்கையை பகவான் கிருஷ்ணரின் மகிமைகளைப் பரப்புவதற்காகப் பயன்படுத்துங்கள். இந்த பிறவியிலேயே நீங்கள் கோலோக விருந்தாவனத்தில் கிருஷ்ணருடன் தொடர்பு கொள்ளும் நிலைக்கு உயர்த்தப்படுவீர்கள். எனவே தயவுசெய்து தூய்மையின் தளத்தில் நிலைத்திருங்கள்; தினமும் தவறாமல் 16 சுற்றுகள் நாமஜபம் செய்யுங்கள், அனைத்து ஒழுக்கக் கட்டுப்பாட்டு விதிமுறைகளையும் பின்பற்றுங்கள். எனது புத்தகங்கள் அனைத்தையும் படியுங்கள். உங்கள் வாழ்க்கை நிச்சயம் வெற்றி பெறும்.” வைகுந்தநாதருக்கு எழுதிய கடிதம், சாரதியா, 4 ஏப்ரல் 1971, பம்பாய்

“இந்த வழிமுறை எளிமையானது. பக்தி வாழ்வின் ஒழுக்கக் கட்டுப்பாட்டு விதிமுறைகளைத் தவறாமல் பின்பற்றுங்கள், தினமும் தவறாமல் 16 சுற்றுகள் ஜெபமாலையில் ஜெபியுங்கள், நமது புத்தகங்கள் அனைத்தையும் படியுங்கள், வகுப்புகளிலும் ஆரத்திகளிலும் கலந்துகொள்ளுங்கள், மேலும் நகர சங்கீர்த்தனத்திற்குச் செல்லுங்கள். ஏதேனும் கேள்விகள் இருந்தால் அவற்றை எப்போதும் உங்கள் மூத்த ஆன்மீக சகோதர சகோதரிகளிடம் கேளுங்கள். எனவே நமது வழிமுறை அவ்வளவு கடினமானதல்ல. மாறாக அது ஆனந்தமானது. ஆகவே இந்த வழியில் உங்களை ஆர்வத்துடன் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள், இறுதியில் , பகவானின் இருப்பிடத்திற்குச் திரும்பிச் செல்வீர்கள்.” சுகதாவுக்கு எழுதிய கடிதம், 4 ஆகஸ்ட் 1971, லண்டன்

எனது செய்தி

ஸ்ரீல பிரபுபாதர் நான் 50,000 சீடர்களை உருவாக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் உண்மையில் இது ஒரு பெரிய பொறுப்பு, ஒவ்வொரு சீடனும் பகவானிடம் திரும்பிச் செல்ல வேண்டும். இதை நான் முன்பே கூறியுள்ளேன். ஆனாலும் மீண்டும் கூறுகிறேன். ஏனென்றால் அனைவரும் பக்தி யோகிகளாக அல்லது பக்தி யோகினிகளாக இருக்க வேண்டும் என்பதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன்.

நாம் சாதாரணமான காரியத்தை செய்யவில்லை. நாம் ஒரு போரில் இருக்கிறோம். நாம் பௌதிக சக்தியுடன் போரிடுகிறோம். மாயைக்கு எதிரான இந்தப் போரில் ஒவ்வொரு பக்தரும் ஆர்வத்துடன் இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். நமக்கு இருப்பது ஒரு குறுகிய ஆயுள், 100 ஆண்டுகளுக்கும் குறைவானது. நாம் ஆர்வத்துடன் இருப்பது மட்டும் போதாது – இது வாழ்வா சாவா என்ற நிலை! நாம் முழுமையான கிருஷ்ண உணர்வுடன் இல்லையென்றால் இந்தக் கலியுகம் நமக்காகக் காத்திருக்கிறது.

எப்படியாவது மாயை உங்கள் வழியில் குறுக்கிட்டு உங்கள் ஆர்வத்தை இழக்கச் செய்திருந்தாலும், கிருஷ்ண உணர்வைப் பயிற்சி செய்வதற்கும், திருநாமத்தை உச்சரிப்பதற்கும் நீங்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்க வேண்டும். இது ஒரு போர். இது மாயையின் வேலை. அவர் கிருஷ்ணரின் ஒரு நல்ல சேவகர் அவர் இதைச் செய்கிறார். ஆகவே நாமும் சிறந்த சேவகர்களாக இருக்க வேண்டும். நாம் புனித நாமத்திடம் சரணடைய வேண்டும். நாம் ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே / ஹரே ராம ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே என்று ஜபித்து கலியை விரட்டியடிக்க வேண்டும்!

ஊக்கமளிக்கும் கதைகள்

டெல்லியில் இருக்கும்போது, எனது அன்புக்குரிய சகோதரரும் நண்பருமான ஸ்ரீ கோபால கிருஷ்ண கோஸ்வாமியை நினைவுகூர்கிறேன். அவர் டெல்லியில் 18 அல்லது 20 கோயில்களைக் கட்டினார். அனைத்துக் கோயில்களிலும் மிகச் சிறப்பாகப் பிரச்சாரமும் புத்தக விநியோகமும் நடைபெற்று வருகின்றன.

இரண்டு நாட்களுக்கு முன்பு, புதிய அருங்காட்சியகப் பிரிவின் திறப்பு விழாவில் கலந்துகொண்டேன். அவர்கள் பிரச்சாரத்தில் பல நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறார்கள். நான் மெய்நிகர் யதார்த்த நிகழ்ச்சியையும் பார்த்தேன், அது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.

எனது கடந்த பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வரும் செய்தியில், பஜன் கிளப்பிங் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். ஒவ்வொரு நகரத்திலும் கிராமத்திலும் தனது நாமம் பாடப்படும் என்று ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு கணித்தார். மேலும், ஸ்ரீல பிரபுபாதர் அனைவரும் ஹரே கிருஷ்ண என்று உச்சரிக்கவும், நடனமாடவும், பிரசாதம் பெறவும் வேண்டும் என்று விரும்பினார். எனவே, பஜன் கிளப்பிங் என்பது அத்தகைய ஒரு நிகழ்ச்சியாகும். ஸ்ரீல பிரபுபாதர் இந்த வகையான நிகழ்ச்சியை அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விரும்பினார், ஆனால் இளைஞர்கள் அதை ஏற்பாடு செய்கிறார்கள். மற்ற நாடுகளில் அவர்கள் இதைச் செய்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் இந்தியாவில், பல்லாயிரக்கணக்கான மக்கள் ஹரே கிருஷ்ண என்று உச்சாடனம் செய்து நடனமாடுகிறார்கள்! இஸ்கான் சென்னை தயாரித்த பஜன் கிளப்பிங் வீடியோவை நீங்கள் பார்க்கலாம்.

பகவான் நரசிம்ம தேவர் மிகவும் கருணையுள்ளவர், அவர் தனது பக்தரைக் காப்பதற்காகத் தோன்றினார். கிருஷ்ணரும் கருணையுள்ளவர். அதற்கும் மேல் சைதன்ய மஹாபிரபு மிகவும் கருணையானவர். செடி கொடிகள் மற்றும் பூச்சிகள் கூட விடுவிக்கப்பட வேண்டும் என்று அவர் பிரார்த்திக்கிறார். வீழ்ந்த ஆத்மாக்கள் அனைவரையும் அவர் விடுவிக்க விரும்புகிறார். எனவே அனைவரும் இதை பிரச்சாரம் செய்ய வேண்டும். அனைவரும் சைதன்ய மஹாபிரபுவின் கருணையை வெளிப்படுத்தி, உன்தை ஆனந்தத்தை அடைய முயற்சிக்க வேண்டும், இந்த பௌதிக மாயையில் நிலைத்திருக்கக் கூடாது.

நேற்றிரவு நாமாம்ருதத்தில், பௌதிக வாழ்க்கை ஒரு வகையான ஆழ்ந்த மயக்கநிலை போன்றது என்று படித்துக் கொண்டிருந்தோம். பாம்புக்கடியின் உறக்கத்திலிருந்து மந்திரங்களால் மக்களை எழுப்புவதைப் போல, நாம் இந்த பௌதிக உலகின் உறக்கத்திலிருந்து மக்களை இந்த மஹா-மந்திரத்தால் எழுப்புகிறோம்: ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே / ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே!
நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், ஆனந்தமயமான கிருஷ்ண உணர்விலும் இருப்பீர்கள் என நம்புகிறேன்.

உங்கள் நலனை எப்போதும் விரும்பும், ஜெயபதாக சுவாமி