
மூகம் கரோதி வாசலம் பங்கும் லங்காயதே கிரிம் யத்-கிருபா தம் அஹம் வந்தே ஸ்ரீ-குருன் தின தாரிணம் பரமானந்த-மாதவம் ஸ்ரீ சைதன்ய ஈஸ்வரம் ஹரிஹி ஓம் தத் சத்
ஜெயபதாக ஸ்வாமி: கௌடிய மடத்தின் உறுப்பினர்கள் இங்கு வருகை தந்திருப்பதற்கு மிக்க நன்றி. நான் பெங்காலி மற்றும் ஆங்கில மொழிகளில் பேசுவேன். ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரரின் சீடர்கள் மற்றும் பேரச்சீடர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, கூட்டாகச் செயல்பட்டு, இந்தக் கிருஷ்ண உணர்வு இயக்கத்தின் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த ஸ்வாமி பிரபுபாதர் விரும்பினார். இன்று மிகவும் சிறப்பான ஒரு நாளாகும். பக்தர்கள் அனைவரும் இங்கு ஒன்றாகக் கூடியிருப்பதற்கு மிக்க நன்றி. நேற்று, ஒரு ஆன்மீக ஆசான் தனது சீடர்களை மீண்டும் இறைவனின் இருப்பிடத்திற்கே (Back to Godhead) அழைத்துச் செல்லும் பொறுப்பை எவ்வாறு கொண்டிருக்கிறார் என்பது குறித்து நான் பேசினேன். என்னால் அதைச் செய்ய முடியும்; ஆனால் நீங்கள் என்னைப் பின்பற்ற வேண்டும். எனவே, எனது சீடர்கள் எவ்வாறு முக்தி அடைய முடியும் என்பதைப் பற்றி நான் தினமும் சிந்தித்து வருகிறேன்! அதற்காக, எனது ‘ஜெயபதாக ஸ்வாமி செயலி’ (App) மற்றும் பிற வழிகள் மூலம் நான் தொடர்ந்து செய்திகளை அனுப்பி வருகிறேன். இவ்வாறு, உலகம் முழுவதும் உள்ள எனது சீடர்களையும் நலம் விரும்புபவர்களையும் நான் சென்றடைகிறேன். எனது சீடர்கள் அனைவரும், சாத்தியமான வரையில், இரண்டாவது தீட்சையைப் (Second Initiation) பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் அதற்குரிய தகுதிகளை அவர்கள் பெற்றிருக்க வேண்டும். நான் பலமுறை இது குறித்துக் கூறியிருந்தாலும், ஏதோ ஒரு காரணத்தினால் அது இன்னும் முழுமையாகச் செயல்படுத்தப்படாமல் இருக்கிறது. எனவே, தினமும் நான் சாஸ்திரங்களை வாசித்து வருகிறேன். ‘திரி-சந்தியா’ (மூன்று சந்தி நேரங்கள்) வேளைகளில் நாம் 108 முறை மந்திரம் ஜபித்தால், நம்மால் இறைவனின் இருப்பிடத்தை அடைய முடியும் என்று கூறும் ஒரு செய்யுளை நான் கண்டறிந்தேன். எனவே, இன்னும் இரண்டாவது தீட்சையைப் பெறாதவர்கள், திரி-சந்தியா வேளைகளில் ‘ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை’ 108 முறை ஜபிக்கலாம். அதாவது, காலை, நண்பகல் மற்றும் மாலை ஆகிய மூன்று வேளைகளிலும்:
ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே /
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே!
(108 முறை)
சுமார் 6 முதல் 7 நிமிடங்கள் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் இதை ஜபிக்க முடியும். அதுபோல, காயத்ரி ஜபமும் சுமார் அதே நேரமே எடுக்கும். ஆகவே, இது ஒரு அறிவுறுத்தல் — அனைவரும் மூன்று கால -சந்தியா வேளைகளில் ஹரே கிருஷ்ண மஹா-மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும்.
இப்போது, தீட்சை பெற்ற பக்தர்கள் 16 சுற்றுகள் ஜபிப்பதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்கள்; அவர்கள் தங்களுடைய 16 சுற்றுகளோடு இதையும் இணைத்து ஜபிக்கலாம். நிச்சயமாக, குறைந்தபட்சம் 16 சுற்றுகள் ஜபிக்க வேண்டும் — நீங்கள் மேலும் அதிகமாக ஜபிக்க விரும்பினால், அதில் எந்தப் தவறும் இல்லை!
நீங்கள் எப்பொழுதும் உங்களுடைய பக்தியையும் பக்தி சேவைகளையும் எவ்வாறு அதிகரிக்கலாம் என்று சிந்தித்து கொண்டு இருங்கள்.
தற்பொழுது, ஸ்ரீல பிரபுபாதர் பகவத்கீதை, ஸ்ரீமத்-பாகவதம் மற்றும் சைதன்ய-சரிதாம்ருதம் போன்றவற்றை மொழிபெயர்த்துள்ளார் — இந்த நூல்கள் படிக்கப்பட வேண்டும். கிருஷ்ண உணர்வு பற்றிய அறிவியலை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஸ்ரீல அ.ச. பக்திவேதாந்த ஸ்வாமி பிரபுபாதர் தனது பக்தர்கள் இந்த அறிவியலை அறிய வேண்டும் என்று விரும்பினார்; அதற்கு சான்றாக நீங்கள் பட்டங்களை பெற வேண்டும்.
நான் தனிப்பட்ட முறையில் ஸ்ரீல பிரபுபாதரிடமிருந்து பக்தி-சாஸ்த்ரி பட்டத்தை பெற்றேன். அதன் பிறகு, நான் படித்து தேர்வுகளை எழுதி, பக்தி-வைபவ, பக்தி-வேதாந்த மற்றும் பக்தி-சார்வபௌம பட்டங்களை பெற்றேன். குழந்தைகளுக்கான திட்டத்தை அமைத்து அதன் மூலம் 18 வயது பூர்த்தியாகும் முன்பே குழந்தைகள் பக்தி-சாஸ்த்ரி மற்றும் பக்தி-வைபவ பட்டங்களை பெறுகின்றனர் என்று யாரோ ஒருவர் எனக்கு எழுதி இருந்தார், இது மிகப் பெரிய முன்னேற்றம்!
பிரச்சாரத்தை எண்ணிலடங்காத! எண்ணிலடங்காத! வகையில் விரிவுபடுத்த வேண்டும் என்று ஸ்ரீல அ.ச. பக்திவேதாந்த ஸ்வாமி பிரபுபாதர் என்னிடம் தெரிவித்தார். எனது அனைத்து சீடர்களும் எனக்கு உதவுவதாக வாக்குறுதி அளித்துள்ளனர். ஆகவே ஒவ்வொரு சீடரும் ஒரு புதிய பக்தரை உருவாக்கினால், அது எனக்கு மிகுந்த உதவியாக இருக்கும் என்று நான் உணர்கிறேன்.
அப்படியானால், உங்களுடைய வாக்குறுதி என்ன? நீங்கள் எனது சீடராக இருக்க வேண்டிய அவசியமில்லை — ஒரு ஆண்டில் எத்தனை நபர்களை நீங்கள் ஹரே கிருஷ்ண மஹா-மந்திரத்தை ஜபிப்பதற்கு தொடங்கச் செய்வீர்கள்? ஒவ்வொரு மாதமும் எத்தனை நபர்கள்? நான் ஒரு நபர், பத்து நபர்கள், நூறு நபர்களை ஹரே கிருஷ்ண மஹா-மந்திரத்தை ஜபிக்கத் தொடங்கச் செய்வேன் என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.
எத்தனை நபர்கள் பக்தி சேவையை துவங்கி அதை பயிற்சி செய்து தங்களுடைய ஜபத்தையும் முழுமையாகப் பின்பற்றுகிறார்கள்? இவ்வாறு, பக்தர்கள் தாங்கள் எத்தனை நபர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஒரு உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.
கலியுகத்தில் உள்ள மக்கள் சண்டையிடுபவர்களாகவும், சோம்பேறிகளாகவும், அதிர்ஷ்டமில்லாதவர்களாகவும் இருக்கின்றனர் — பற்பல சிரமங்கள்! கலியுகம் பெருங்கடல் அளவு குற்றங்களையுடையது! ஒரே நம்பிக்கை ஹரிநாமமே! ஒரே நம்பிக்கை!
ஹரேர் நாம ஹரேர் நாம
ஹரேர் நாமைவ கேவலம்
கலௌ நாஸ்த்யேவ நாஸ்த்யேவ
நாஸ்த்யேவ கதிர் அன்யதா
[Cc. ஆதி 17.21]
மொழிபெயர்ப்பு: ஹரிநாமம், ஹரிநாமம், ஹரிநாமம் — இந்த கலியுகத்தில், இறைவனின் புனித நாமங்களை ஜபிப்பது, இறைவனின் புனித நாமங்களை ஜபிப்பது, இறைவனின் புனித நாமங்களை ஜபிப்பதே ஒரே வழி; வேறு வழி இல்லை, வேறு வழி இல்லை, வேறு வழி இல்லை.
மக்கள் துன்பப்படுகிறார்கள். தயவுசெய்து அவர்களுக்கு உதவுங்கள்!
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே!!
மக்கள் அனைவரும் ஜபம் செய்வதை உறுதிப்படுத்துவது மிகவும் அவசியம். நமக்கு தீக்ஷா குரு மற்றும் சிக்ஷா குரு (Śikṣā-guru) என இரு வகையான குருக்கள் உள்ளனர். தீக்ஷா குரு ஒருவராக மட்டுமே இருக்க முடியும், ஆனால் ஆன்மீக அறிவுரைகளை வழங்கும் சிக்ஷா குருக்கள் பலர் இருக்கலாம். ஒருவர் என்னிடம் ‘தங்களை எனது சிக்ஷா குருவாக ஏற்றுக்கொள்ளலாமா?’ என்று கடிதம் எழுதியிருந்தார். தீக்ஷா குருவாகிய நானும் ஒரு சிக்ஷா குருதான். நமது அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சார்யாரே அனைத்து பக்தர்களுக்கும் முதன்மையான மற்றும் ஆதாரமான சிக்ஷா குரு ஆவார்.
இது தவிர, ஒவ்வொரு பக்தரும் கிருஷ்ண உணர்வில் முன்னேறுவதற்குப் பல்வேறு பொருத்தமான அறிவுரைகளைப் பெறுகிறார்கள். எனவே, நீங்கள் என்னிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை – நீங்கள் சிக்ஷா குருக்களைக் கொண்டிருக்க வேண்டும். யார் உங்களை வழிநடத்துகிறார்களோ, யார் உங்களுக்குப் பல்வேறு அறிவுரைகளை வழங்குகிறார்களோ, அவர்களின் பெயர்களை நீங்கள் குறிப்பிட வேண்டும்; அவர்களிடமிருந்து பல்வேறு அறிவுரைகளையும் வழிகாட்டல்களையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். உங்களுக்குச் சிக்ஷா குருக்களாகச் செயல்படுபவர்களை நீங்கள் மதிக்க வேண்டும், மேலும் அவர்களுக்கு வைஷ்ணவ முறைப்படி பிரதிபலன் செய்ய வேண்டும்.
சிக்ஷா குருக்களில் இரண்டு வகைகள் உள்ளனர்: மிகவும் முன்னேறிய நிலையில் இருப்பவர்கள் மற்றும் பொருத்தமான ஞானத்தை வழங்குபவர்கள். எனவே, எனது சீடர்கள் அனைவரும், என்னையும் ஸ்ரீல பிரபுபாதரையும் தவிர்த்து, தங்களுக்கு வழிகாட்டும் 3 முதல் 5 சிக்ஷா குருக்கள் யார் என்பதை என்னிடம் தெரிவிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். உதாரணமாக, ஸ்ரீல பக்திவிநோத தாகூரர், ஸ்ரீல பக்திஸித்தாந்த சரஸ்வதி தாகூரருக்குத் தந்தையாகவும் சிக்ஷா குருவாகவும் இருந்தார். அவர் தீக்ஷா குருவாக இருந்திருக்க முடியும் என்றாலும், தார்மீக மரபுப்படி அவர் அவ்வாறு செய்யவில்லை. ஏனெனில், பெற்றோர் தீக்ஷா குருவாக இருக்கக்கூடாது என்பது ஒரு மரபு.
எனவே, உங்கள் பெற்றோர் பக்தர்களாக இருந்தால், அவர்கள் உங்கள் சிக்ஷா குருக்களாக இருக்கலாம். கோயில் தலைவர்கள், நாம ஹட்டா தலைவர்கள், கீதை வகுப்புத் தலைவர்கள் என உங்கள் ஆன்மீக வாழ்வில் உங்களை வழிநடத்தும் எவரும் சிக்ஷா குருக்களாக இருக்கலாம். நான் அனைவரையும் வழிநடத்த முயற்சிக்கிறேன், ஆனால் எனக்குப் பல சீடர்கள் இருப்பதால் ஏராளமான கேள்விகள் வருகின்றன. நீங்கள் மற்றவர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெறலாம், ஆனால் அவை எனது அறிவுரைகளுக்கு எதிராக இருக்கக்கூடாது. இஸ்கானில் நாம் இன்னும் சிக்ஷா குரு கலாச்சாரத்தை முழுமையாக நிலைநிறுத்தவில்லை, அதை நான் நிலைநிறுத்த விரும்புகிறேன்.
உங்களில் எத்தனை பேர் கிருஹஸ்தர்கள்? பலர்! பொதுவாக பிரம்மச்சாரிகள், வானப்பிரஸ்தர்கள் மற்றும் சந்நியாசிகள் ஆகியோர் ஆசிரமத்தினால் பராமரிக்கப்படுகிறார்கள். சில வானப்பிரஸ்தர்கள் அவர்களது குடும்பத்தினரால் பராமரிக்கப்படலாம். ஆனால் கிருஹஸ்தர்கள் பொருளாதார ரீதியாகத் தனித்து இயங்குபவர்கள். இப்போது, நீங்கள் கிருஷ்ணரிடம் உண்மையாக இருக்க வேண்டும். தீக்ஷை பெறுவதற்கு 16 மாலைகள் ஜபம் செய்ய வேண்டும் என்று ஸ்ரீல பிரபுபாதர் கூறியதைப் போல, ஒரு கிருஹஸ்தர் தனது சேவையில் எவ்வளவு நேரத்தை அல்லது பங்கைக் கிருஷ்ணருக்கு ஒதுக்க வேண்டும் என்பதும் வரையறுக்கப்பட வேண்டும்.
கலியுகத்தில் பேராசிரியர், மருத்துவர், வழக்கறிஞர், அரசியல்வாதி எனப் பலரும் வேலைக்குச் சென்று ஊதியம் பெறுகிறார்கள். வர்ணாஸ்ரம முறைப்படி, ஊதியத்திற்காக வேலை செய்பவர்கள் அனைவரும் சூத்திரர்கள் என்று கருதப்படுவர். ஆனால் நமது கிருஷ்ண உணர்வுள்ள ‘தெய்வ-வர்ணாஸ்ரம’ முறையில், நாம் அவ்வாறு பார்ப்பதில்லை. சைதன்ய மஹாபிரபுவின் கூற்றுப்படி, அனைவரும் வைஷ்ணவர்களாக இருக்க வேண்டும் என்பதே நமது விருப்பம்.
உதாரணமாக, ஒருவருக்கு மாதம் ஒரு லட்சம் ரூபாய் ஊதியம் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ஒவ்வொருவரும் தங்களது வருமானத்தில் குறைந்தபட்சம் 11 சதவீதத்தைக் கிருஷ்ணருக்கு வழங்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். அந்தத் தொகையை எப்படிச் செலவிடுவது என்பதை அவர்களே முடிவு செய்யலாம். மாதம் ஒருமுறையோ, மூன்று மாதங்களுக்கு ஒருமுறையோ, ஆறு மாதங்களுக்கு ஒருமுறையோ அல்லது ஆண்டுக்கு ஒருமுறையோ அவர்கள் தங்களது பங்களிப்பை வழங்கலாம். இவ்வாறு வழங்குவதன் மூலம் கிருஹஸ்த பக்தர்களின் உழைப்பு தூய்மையடைகிறது.
ஸ்ரீல ரூப கோஸ்வாமியும் ஸநாதன கோஸ்வாமியும் முன்பு அரசாங்கத்தில் முதலமைச்சராகவும் நிதி அமைச்சராகவும் இருந்தனர். பல்வேறு சாஸ்திரங்களில், மக்கள் அவர்களது தானத்தைப் பெறுவதற்காக வரிசையில் நின்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் அனைத்தையும் முறையாகக் கணக்கிட்டு, தங்கள் வருமானத்தில் 50 சதவீதத்தைக் கிருஷ்ணரின் சேவைக்கும், 25 சதவீதத்தைக் குடும்ப உறுப்பினர்களுக்கும் வழங்கிவிட்டு, மீதமுள்ள 25 சதவீதத்தை அவசர காலத் தேவைகளுக்காக வைத்துக் கொண்டனர்.
வியாபாரிகள் மற்றும் விவசாயிகளின் நிலை சற்றே வேறுபட்டது, அவர்களுக்கு நிலையான ஊதியம் கிடையாது. உதாரணமாக, கோலவேச்ச ஸ்ரீதரர் ஒரு விவசாயி, அவர் வாழைப் பொருட்களை விற்று வந்தார். வங்காளத்தில் அனைவரிடமும் வாழை மரங்கள் இருந்ததால், அந்தத் தொழில் பெரிய லாபத்தைத் தரவில்லை. இருப்பினும், அவர் தனது லாபத்தில் 50 சதவீதத்தைக் கிருஷ்ணருக்கு வழங்கினார். அதன் காரணமாக அவர் மிகவும் ஏழ்மையில் இருந்தார். ஆனால், ஜகத்குரு ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அவரிடம் தினமும் செல்வார்! ஹரிபோல்! கௌரங்க!
எனவே, நீங்கள் குறைந்தபட்சம் 11 சதவீதம் வழங்குங்கள், உங்களால் 50 சதவீதம் வழங்க முடிந்தால் அது மிகவும் சிறப்பு! இதைப்பற்றி நீங்கள் ஆலோசிக்கலாம். உங்களுக்கும் கிருஷ்ணருக்கும் இடையிலான உறவு இது. மற்றொரு யோசனையும் உள்ளது – இஸ்கான் அமைப்பில் பணியாற்றும் பக்தர்களுக்குக் குறைந்தபட்ச பராமரிப்பு ஊதியம் வழங்கப்படுகிறது. அவர்களும் தங்களது சூழ்நிலைக்கு ஏற்ப இதைக் கருத்தில் கொள்ளலாம்.
பக்தி யோகத்தில் இருக்கும் நாம் அனைவரும் பக்தி யோகிகள் அல்லது பக்தி யோகினிகள் ஆவோம். எனவே, நீங்கள் இந்த கிருஷ்ண உணர்வை அல்லது பக்தி யோகத்தை ஒரு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்! எனக்கு நேரம் குறைவாக இருக்கிறது ஆனால் சொல்வதற்கு பல விஷயங்கள் உள்ளன. ஆகவே, மக்கள் மிகவும் தீவிரமாக இருந்து மாயைக்கு எதிராகப் போர் தொடுக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்! நாம் கிருஷ்ணரின் திருநாமத்தை உச்சரிக்க வேண்டும், மேலும் பக்தி யோகத்தைப் பயிற்சி செய்ய வேண்டும்! நாம் யமதூதர்களுக்கு ஒரு விடுமுறை அளிக்க வேண்டும்! ஆகவே, நாம் நமது ஸ்தாபகரான ஆச்சார்யருக்கு சேவை செய்ய வேண்டும்! நாம் அவருடைய விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும்! அவருடைய சில விருப்பங்கள் யாதெனில் – மாயாபூரில் வேத கோளரங்கக் கோயிலை கட்டுவது மற்றும் வேத கோளரங்க அறிவியல் அருங்காட்சியகத்தை உருவாக்குவது. உண்மையில், மாயாப்பூரின் மொத்த பெருந்திட்டமும் ஸ்ரீல பிரபுபாதரின் விருப்பங்களே ஆகும். ஸ்ரீல பக்திவினோத தாகூரின் பிறந்த இடமான பிர்நகரில், சில முக்கியமான வளர்ச்சிப் பணிகள் நடைபெற வேண்டும் என்று ஸ்ரீல ஏ.சி. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் விரும்பினார். மேலும், பிரச்சார பணியை நாம் எவ்வாறு விரிவுபடுத்தலாம் என்பது குறித்து உங்களிடம் ஏதேனும் புதிய யோசனைகள் இருந்தால், தயவுசெய்து முன்வந்து நீங்கள் அவற்றை தெரிவியுங்கள். நாம் இஸ்கானில் புத்தகங்களை விநியோகிக்க வேண்டும். நான் புத்தகங்களைப் படிப்பதைப் பற்றி பேசினேன், ஆனால் நாம் புத்தக விநியோகமும் செய்ய வேண்டும். நாம் உயர்மட்ட குழுவிற்கு (GBC) சேவை செய்ய வேண்டும், உயர்மட்ட குழு என்பது என்பது ஸ்ரீல பிரபுபாதர் மற்றும் ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூராரின் யோசனையாகும். மேலும், தயவுசெய்து இஸ்கானில் இருங்கள். ஸ்ரீல பிரபுபாதர், இந்த உலகத்தை விட்டு செல்லும் ஐந்து நாட்களுக்கு முன்பு பக்திவேதாந்த சுவாமி அறக்கட்டளையை உருவாக்கினார். இது ஸ்ரீல பிரபுபாதரின் விருப்பமாகும். இந்த அறக்கட்டளையில் சில இஸ்கான் உறுப்பினர்களும், சில கௌடிய மட உறுப்பினர்களும் உள்ளனர், இதில் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒற்றுமையாக சேவை செய்ய முயற்ச்சிக்கிறோம். சாரஸ்வத கௌடிய வைஷ்ணவ சங்கமும் உள்ளது. நம்முடைய கௌடிய சம்பிரதாயத்தில் உள்ள அனைத்து சீடர்களும் ஒன்றுபட வேண்டும் என தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் விரும்பினார்.
இவ்வாறு, என் சீடர்கள் அனைவரும் எவ்வாறு முக்தி அடைவார்கள் என்று நான் தினமும் நினைத்துகொண்டிருக்கிறேன். ஜெயபதாகா சுவாமி செயலியில் நான் தினசரி செய்திகளையும் மற்றும் மாதம் இருமுறை செய்திகளையும் அனுப்புகிறேன். கடந்த ஆண்டு, எனக்கு 20,777 மின்னஞ்சல்கள் வந்தன. அவற்றில் சுமார் 99 சதவிகித மின்னஞ்சல்களுக்கு நான் பதிலளித்தேன்! ஆனால், மின்னஞ்சல் அனுப்புவதால் நீங்கள் எனக்குத் தொந்தரவு தருகிறீர்கள் என்று எண்ண வேண்டாம்! அது என் கடமை. உங்கள் சிக்ஷா-குருவிடமிருந்து நீங்கள் அறிவுரைகளைப் பெற்றால் அதுவும் நல்லது. ஆனால் உங்கள் சிக்ஷா-குருவிடமிருந்து உங்களுக்குப் பதில் கிடைக்கவில்லை என்றாலோ அல்லது உங்களுக்கு இன்னும் சில சந்தேகங்கள் இருந்தாலோ, எனக்கு மின்னஞ்சல் எழுதுங்கள். நீங்கள் எனக்கு மின்னஞ்சல் எழுதுவதால் நான் தொந்தரவு அடைவேன் என்று நினைக்க வேண்டாம். நீங்கள் மாயையில் வீழ்ந்தால் தான் நான் கவலைகொள்வேன். ஸ்ரீல பிரபுபாதரின் விருப்பங்களை நிறைவேற்றவும், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லவும் எனக்கு உதவி செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், உங்கள் ஆதரவுக்கு நன்றி! நீங்கள் செய்யும் கோயில் சேவைகள், நாமஹட்டா, பக்தி விருக்ஷ, கீதை வகுப்பு போன்ற அனைத்து சேவைகளையும் எனக்கு நேரடியாக செய்யும் சேவையாகவும், உதவியாகவும் நான் கருதுகிறேன்! கிருஹஸ்தர்கள் எப்படி, எவ்வளவு தானம் கொடுக்க வேண்டும், யாருக்குக் கொடுக்க வேண்டும், எதற்காகக் கொடுக்க வேண்டும் என்பது போன்ற சில விவரங்கள் உள்ளன – இவை அனைத்தையும் பக்தசமூக மேம்பாட்டு அமைச்சகம் (CDM) பரிசீலித்து வருகிறது. சுருக்கமாகச் சொன்னால், கோயில் சேவை, குரு சேவை, நாமஹட்டா சேவை, ஸ்ரீல பிரபுபாதர் சேவை, ஆன்மீக குரு சேவை, ஆகிய அனைத்துமே நீங்கள் பின்பற்றும் சரியான பாதைகள் ஆகும்.
மத்திய கிழக்கில் ஒரு போர் நடந்துகொண்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம். அநேக பக்தர்கள் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகளில் உள்ளனர். இந்தத் துன்பங்கள் அனைத்திலிருந்தும் பக்தர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நீங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். நான் பிரார்த்தனை செய்கிறேன், ஆனால் உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். நான் சற்று நீளமாகப் பேசியிருந்தால் மன்னிக்கவும்! ஏனெனில் நான் பல விஷயங்களை உங்களுக்கு தெரிவிக்கவேண்டி உள்ளது. அவற்றை உங்களால் நினைவில் கொள்ள முடியும் என்று நம்புகிறேன். நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் பக்தி யோகிகள் மற்றும் யோகினிகள்! மேலும், திருநாமத்தை உச்சரிப்பதன் மூலம் இந்த பௌதிக உலகை நாம் வெல்ல வேண்டும்!
ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா, ஹரே ஹரே/
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே!
மிக்க நன்றி!
குறிப்பு: தவத்திரு. ஜெயபதாக சுவாமி குரு மஹாராஜர், 29 மார்ச் 2026 அன்று இந்தியாவிளுள்ள ஸ்ரீ மாயாப்பூரில் அளித்த வியாச பூசை உரை
ஜெயராஸேஷ்வரி தேவி தாசியால் எழுதப்பட்டுள்ளது
JPS காப்பகங்கள் இணைப்பு: https://jayapatakaswamiarchives.net/20260327VP.html