மதுசூதன மாதம் மாதாந்திர செய்தி (14 ஏப்ரல் – 12 மே 2025)

எனது அன்பான தீட்சை பெற்ற, அடைக்கலம் பெற்ற, தீட்சை பெற ஆர்வமுள்ள, சிக்ஷா சீடர்கள், பேர‌ சீடர்கள் மற்றும் நலம் விரும்புபவர்களே,

எனது ஆசீர்வாதங்களையும் வாழ்த்துக்களையும் பொருத்தமானபடி ஏற்றுக்கொள்ளுங்கள்.

எல்லா புகழும் ஸ்ரீல பிரபுபாதருக்கே!

எனது இல்லத்திலிருந்து எழுதப்பட்டது: ஸ்ரீ மாயாபூர் சந்திரோதய ஆலயம்
தேதி: 11 மே 2025

இன்று பகவான் நரசிம்மதேவரின் மிகவும் புனிதமான அவதாரத்
திருநாள். மாயாபூரில், 1986 முதல், பிரஹ்லாத மஹராஜருடன் ஸ்தாணு நரசிம்மதேவரை வணங்குகிறோம். அவரது வடிவம் உக்ரம், ஆக்கிரோஷமானது, அவர் ஹிரண்யகசிபு என்ற அரக்கனைத் தேடி ஒரு தூணிலிருந்து வெளியே வருகிறார். பக்தர்களுக்கு, அவர் ஒரு பாதுகாவலர். ஹிரண்யகசிபு தனது 5 வயது மகன் பிரஹ்லாதனைக் கொல்லத் தயாராக இருந்தான், ஆனால் மகனோ தனது அனைத்து நண்பர்களுக்கும் கிருஷ்ண உணர்வை பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். ஸ்ரீல பிரபுபாதர் நமக்கு பகவான் நரசிம்மதேவரின் வழிபாட்டை அறிமுகப்படுத்தினார்.
ஒரு முறை, ஸ்ரீல பிரபுபாதர் நோய்வாய்ப்பட்டிருந்தபோது, பக்தர்கள் ஆன்மீக குருவின் உடல் மீண்டும் நலம் பெற பகவான் நரசிம்மதேவரைப் பிரார்த்தனை செய்யலாம் என்று கூறினார். நமது பரம குரு, தவத்திரு ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் பிரபுபாதர், அவர்கள் யோகபீட கோவிலில் பகவான் நரசிம்மதேவரை பிரதிஷ்டை செய்தார். மேலும், ஸ்ரீல பக்திவினோத தாகூரர் எழுதிய ஒரு சிறப்புப் பாடல் உள்ளது, அதில் அவர் பகவான் நரசிம்மதேவரிடம், அவரது தாமரைத் திருவடிகளை தனது தலையில் வைத்து, மாயாபூரில், நவத்வீப-தாமத்தில், ஸ்ரீ ஸ்ரீ ராதா மாதவரை வணங்கும்படி ஆசீர்வதிக்குமாறு கெஞ்சினார். எனவே, பகவான் நரசிம்மதேவரின் கருணையால், நாம் ராதா மாதவரை வணங்க முடியும். எனது அனைத்து தீட்சை பெற்ற சீடர்கள், அடைக்கலம் பெற்ற மற்றும் தீட்சை பெற ஆர்வமுள்ள சீடர்கள், பேர-சீடர்கள், சிக்ஷா சீடர்கள் ஆகியோருக்காக பிரஹ்லாத நரசிம்மதேவரின் முன் எனது சிறப்பு பிரார்த்தனைகளைச் செய்தேன். அவர்களின் பக்தி சேவையில் உள்ள எல்லா தடைகளும் நீக்கப்பட்டு, அவர்கள் தூய பக்தி சேவையில் நிலைபெற வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். இஸ்கானில் உள்ள அனைத்து பக்தர்களுக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன். என்னிடம் பக்தி சாரு சுவாமி மஹாராஜர் (bcs.jpscare@gmail.com) மற்றும் கோபால கிருஷ்ண கோஸ்வாமி மஹாராஜர் (gkg.jpscare@gmail.com) ஆகியோரின் சீடர்களுக்கான சிறப்பு மின்னஞ்சல் முகவரியும் உள்ளது.

நரசிம்ம தேவர் மிகவும் கருணையுள்ளவர். பக்கவாதத்திலிருந்து நான் மீண்டதும் பகவானின் கருணைதான் என்று பக்தர்கள் கூறுகிறார்கள். எனக்கு சிகிச்சை அளித்த நரம்பியல் நிபுணர்கள் எனக்கு ஏற்பட்ட பக்கவாதத்தைப் போன்று பாதிக்கப்பட்ட யாரும் குணமடைந்ததை இதுவரை பார்த்ததில்லை என்று கூறினார்கள். அவர்கள் என்னை ஒரு அதிசய நோயாளியாகக் கருதினார்கள்.
அக்க்ஷய-த்ருதியை அன்று நான் ஜெகந்நாதர் தாமம் கோவிலின் திறப்புக்காக திகாவில் இருந்தேன். ஸ்ரீல பிரபுபாதர் எனக்கு பல கட்டளைகளை அளித்துள்ளார்.
சிலது காண்டாமிருகத்தை சுடுவது போல, சாத்தியமற்றது! ஆனால் ஸ்ரீல பிரபுபாதர் கட்டளை இட்டார். எனவே நான் அவற்றை நிறைவேற்ற முயற்சிக்கிறேன். அவர் எனக்குக் கொடுத்த கட்டளைகளில் ஒன்று, வெளிநாட்டு பக்தர்கள் ஜெகந்நாத புரி கோவிலுக்குள் நுழைய அனுமதி பெற முயற்சிப்பது. இந்துக்கள் அல்லாதவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்று கேள்விப்பட்டபோது அவரே உள்ளே செல்ல மறுத்துவிட்டார். சைதன்ய மஹாபிரபுவை பகவானாக அவர்கள் ஏற்றுக்கொள்வதால், அவருடைய அனைத்து பக்தர்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். ஆரம்ப நாட்களில் நான் புரியைச் சேர்ந்த சங்கராச்சாரியார்களில் ஒருவரிடம் சென்றேன். ஆனால் அவர் என்னை கொதிக்கும் நெய்யைக் குடித்து, இறந்து, மீண்டும் இந்துவாகப் பிறக்கச் சொன்னார்! பின்னர் சில ஆண்டுகளுக்கு முன்பு புரியின் மன்னர் கஜபதி மஹராஜருக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதினேன். எனவே 50 ஆண்டுகளுக்கும் மேலாக நான் பல்வேறு வழிகளில் முயற்சித்து பல செல்வாக்கு மிக்கவர்களை அணுகியுள்ளேன். ஆனால் தைத்யபதிகளில் ஒருவர், வெளிநாட்டினர் வந்தால் அவர்களின் பக்தி மிகவும் கவர்ந்திழுப்பதாக இருக்கும் பகவான் ஜெகந்நாதர் கோயிலை விட்டு வெளியேறி அவர்களுடன் செல்லக்கூடும் என்று அவர்களின் வேதங்களில் எழுதப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். ஆனால் இப்போது நமது மேற்கு வங்க முதல்வர் ஸ்ரீமதி மம்தா பானர்ஜி அவர்கள் மேற்கு வங்காளத்தின் திகாவில் ஒரு நகல் ஜெகந்நாதர் கோவிலைக் கட்டியுள்ளார். திகா கௌர-மண்டல-பூமியிலும், ஜெகந்நாத புரி ஸ்ரீ-க்ஷேத்திரத்திலும் உள்ளன. ஜெகந்நாத புரி கோயிலுக்கும் திகா ஜெகந்நாத தாமத்திற்கும் இடையே வடிவமைப்பில் 15 மிமீ வித்தியாசம் மட்டுமே இருப்பதாக கட்டிடக் கலைஞர் கூறினார்!

மூன்று திருவிக்கிரகங்கள் உள்ளனர். ஒரு பெரிய ஜெகந்நாதர், பலதேவர், சுபத்ரா, சுதர்சனர் மற்றும் மற்றொரு சிறிய ஜெகந்நாதர், பலதேவர், சுபத்ரா, சுதர்சனர் மற்றும் ராதா மதன-மோஹனர் ஆகியோர் உள்ளனர். புரியிலிருந்து வந்த பாண்டாக்கள் சிறிய ஜெகந்நாதர் திருவிக்கிரங்களுக்கு பிராண-பிரதிஷ்டை செய்தார்கள். மீதமுள்ள திருவிக்கிரகங்களுக்கு நான் பிராண-பிரதிஷ்டை சடங்கைச் செய்தேன்.

ஜகன்நாத புரியில், ஒரு கழுகு கோவிலின் சுதர்சன சக்கரத்தில் கட்டப்பட்டிருந்த கொடியை எடுத்துக்கொண்டு கோவிலை வலதுபுறமும் பின்னர் இடது புறமும் சுற்றி வந்தது. அதன்பிறகு, கழுகு அந்தக் கொடியை பூரியில் வசிக்கும் ஒருவரின் மொட்டை மாடியில் வீசியது, அவர் அதை நமது மேற்கு வங்க முதல்வரின் வேண்டுகோளின் பேரில் திகாவுக்குக் கொண்டு வந்தார், அதே கொடி திகா கோவிலிலும் ஏற்றப்பட்டுள்ளது! ஜகன்னாதர் இவ்வளவு கருணை உள்ளவராக இருப்பார் என்று என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை!

முதல்வர் கோவிலைக் கட்டினார் மற்றும் திருத்தி அமைக்க முடியாத ஒப்பந்தத்தில் இஸ்கான் வழிபாடு செய்யலாம் என்று அறிவித்தார். இஸ்கான் கொல்கத்தாவின் துணைத் தலைவரான அருள்திரு ராதாரமண தாஸ இதைப் பெற கடுமையாக உழைத்துள்ளார். பூரி கோவிலில், சேவை செய்வதற்காக பல்லாயிரக்கணக்கான பாண்டாக்கள் உள்ளனர். ஆனால் திகாவில் சேவை செய்வதற்கு பக்தர்கள் தேவை. நாம் விக்கிரகங்களை வழிபடுவதற்கும், கீர்த்தனை செய்வதற்கும், புத்தக விநியோகம் செய்வதற்கும், பிரசாத விநியோகம் செய்வதற்கும், சேவை புரிவதற்கும் பிரச்சாரம் செய்வதற்கும் எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன. அங்கு சென்று சேவை செய்வதற்கு விருப்பம் உள்ளவர்களுக்கு தங்குவதற்கு இடமும் பிரசாதமும் வழங்கப்படும். ஆச்சரியமாக இருக்கிறது, அவர்கள் எங்களை பூரி கோவிலுக்குள் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் திகாவில் உள்ள கோவிலோ, பூரி ஜகன்நாதரின் கோவிலை போன்ற நகலாக அமைந்துள்ளது! மேலும் பூஜைக்கு நாமே பொறுப்பு! மேலும் இந்த கோவிலுக்கு வந்து குறுகிய காலமாவது சேவை செய்யும்படி பல வெளிநாட்டு பக்தர்களுக்கு ஊக்குவித்து கடிதம் எழுதியுள்ளேன். கோவிலில் ஏதேனும் சேவை செய்ய விருப்பம் உள்ளவர்கள், அருள்திரு துளசி-ப்ரிய தாஸை +91 8369960736 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். எனவே, அவரால் உங்களுக்கு உதவ முடியும்.

இந்த மாதத்தில், வங்காள தேசத்தில் உள்ள பாஷ்காலி, சட்டோகிராமில் உள்ள கதாதர பண்டிதர் தாமத்தில் கதாதர பண்டிதரின் அவதாரத் திருநாள் விழாவில் நானும் கலந்து கொண்டேன். நான் மெய்நிகரில் நிகழ்ச்சியைப் பார்த்தேன், விழாவில் சுமார் 4000 மக்கள் கலந்து கொண்டதாக கேள்விப்பட்டேன்.

இந்த மாதம் பைஷாக மாதம், இது வருடத்தின் மூன்று புனிதமான மாதங்களில் ஒன்றாகும். கௌராங்கி கந்தர்விகா தேவி தாஸி, பக்தசபை மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பக்திக் குழந்தைகள் மன்றத்தின் மூலம், ஒரு பைஷாக மாத சவாலை ஏற்பாடு செய்திருந்தார். அதில் 850 பங்கேற்பாளர்கள் இருந்தனர், அவர்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாலைகளை ஜபம் செய்து, கீர்த்தனைகளில் தீவிரமாக ஈடுபட்டு, ஸ்லோகங்களைக் கற்றுக்கொண்டு, வகுப்புகளைக் கேட்டு மற்றும் பல்வேறு பக்தி சேவைகளில் ஈடுபட்டிருந்தனர். ஒவ்வொரு நாளும், அவர்களுக்கு ஒரு வித்தியாசமான சவால் இருந்தது. பங்கேற்பாளர்களில் 20% பேர் கிருஷ்ண உணர்வுக்கு புதியவர்கள்.

நரசிம்ம சதுர்தசி நாளான இன்று, நித்யானந்த பிரபுவின் தாமரைத் திருவடிக்கு அபிஷேகம் செய்தேன். இது, தமிழ் நாட்டில் மதுரை மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையில் நிறுவப்படும். நித்யானந்த பிரபு இந்த இடத்திற்கு வருகை தந்ததற்கான சான்றுகள் உள்ளன.

தீட்சை என்பது முற்றிலும் தன்னார்வமானது என்று நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன், ஆனால் நீங்கள் அதை ஏற்றுக்கொண்டவுடன், நீங்கள் அதை வாழ்நாள் முழுவதும் பின்பற்ற வேண்டும். தீட்சையின் போது, குரு சீடரை கடவுளிடம் அழைத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார், மேலும் சீடரின் பொறுப்பு குறிப்பாக ஹரே கிருஷ்ண மஹா-மந்திரத்தை ஒரு நாளைக்கு குறைந்தது 16 சுற்றுகள் உச்சரிப்பதும், நான்கு ஒழுங்குமுறை கொள்கைகளைக் கடைப்பிடிப்பதும் ஆகும். எனவே, நீங்கள் இவற்றைப் பின்பற்றினால், இந்த வாழ்க்கைக்குப் பிறகு ஆன்மீக உலகிற்குத் திரும்பிச் செல்வது உறுதி, கட்டுண்ட வாழ்க்கையில் பிறப்பு மற்றும் இறப்பின் சுழற்சிக்குத் திரும்ப வேண்டியதில்லை. பல இளைஞர்கள், இந்த செயல்முறையை எடுத்துக்கொண்டு தீட்சை பெற உத்வேகம் கொண்டுள்ளதை நான் காண்கிறேன். ஆனால் பின்னர் படிப்படியாக அவர்கள் தங்கள் படிப்பு, தேர்வுகள் போன்றவற்றில் மும்முரமாகி, தினமும் 16 சுற்றுகளை முடிக்க நேரம் கிடைக்கவில்லை என்று கூறுகிறார்கள். எனவே, நீங்கள் பகவானுக்கு முன்பாக, அக்னி சாட்சியாக, ஸ்ரீல பிரபுபாதருக்கு முன்பாக, ஆன்மீக குருவுக்கு முன்பாக மற்றும் பிற வைஷ்ணவர்களுக்கு முன்பாக ஒரு சபதம் எடுக்கும்போது, அதை உங்கள் வாழ்நாள் முழுவதும் பின்பற்ற வேண்டும் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

சில நேரங்களில் பக்தர்கள் என்னிடம், கடவுளிடம் திரும்பிச் செல்ல இரண்டாவது தீட்சை அவசியமா என்று கேட்பார்கள். ஒரு முறை, ஸ்ரீல பிரபுபாதர் என் கையைப் பிடித்து, “முதல் தீட்சைகளில் நீங்கள் கொஞ்சம் தளர்வாக இருக்கலாம், ஆனால் இரண்டாவது தீட்சைக்கு நீங்கள் மிகவும் கண்டிப்பாக இருக்க வேண்டும்” என்று கூறினார். ஒரு குருவின் வழிகாட்டுதலின் கீழ் ஹரே கிருஷ்ண மஹா-மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம், ஒருவர் மீண்டும் கடவுளின் திருநாட்டிற்குச் செல்லலாம், ஆனால் இரண்டாவது தீட்சையை எடுப்பதன் மூலம், ஒருவர் கவனமாகவும் தீவிரமாகவும் பயிற்சி செய்தால், அது மனதை ஒருமுகப்படுத்தி கிருஷ்ணரைப் பற்றிய அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும், மேலும் அது ஒருவருக்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட திருவிக்கிரகங்களை வழிபடும் பாக்கியத்தையும் அளிக்கிறது. ஆனால் ஒருவர் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும், ஏனெனில் ஒரு பிராமணர் நன்றாக அறிந்தவராகவும் அனுபவம் வாய்ந்தவராகவும் இருக்க வேண்டும். எனவே அவர்கள் கவனக்குறைவாக இருந்தால் அவர்களுக்கு அதிக எதிர்வினைகள் கிடைக்கும். எனவே, இரண்டாவது தீட்சை எடுப்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். எனது சீடர்கள் அனைவரும் தீவிரமாக இருக்க வேண்டும், கடவுளிடம் திரும்பிச் செல்ல இது அவசியம் இல்லை என்றாலும்
இரண்டாவது தீட்சை எடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

சில நாட்களுக்கு முன்பு, எனது பக்தி-சார்வபௌம பட்டத்திற்கான தேர்வுகளை மீண்டும் எழுத தொடங்கினேன். தற்போது நான் சைதன்ய-சரிதாமிருத ஆதி-லீலையின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறேன். எனது சீடர்களிடமிருந்து அவர்கள் தங்கள் பக்தி-சாஸ்திரத்தை முடித்துவிட்டதாகவும், பக்தி-வைபவத்தைத் தொடர அவர்கள் உத்வேகம் பெற்றுள்ளதாகவும் பல புதுப்பிப்புகளைப் பெறுகிறேன். அவர்களில் சிலர் பகவத் கீதையை தினமும் படித்து தத்துவத்தை அறிந்திருந்தால் ஏன் சான்றிதழ் தேவை என்று முன்பு நினைத்ததாகக் கூறினர், ஆனால் அவர்கள் உண்மையில் வகுப்புகளில் கலந்து கொண்டு தேர்வுகளை எழுதும்போது, அவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தி, அவர்கள் முன்பு அறியாத பல விஷயங்கள் இருப்பதை உணர்ந்தார்கள். எனவே, எனது சீடர்கள் ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களை முறையாகப் படித்து தேர்வுகளை எழுத ஊக்கமடைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களைப் படித்து அனைவரும் சான்றிதழ் பெற்றால் நன்றாக இருக்கும். பக்கவாதத்தால், என்னால் அவ்வளவு நன்றாக எழுத முடியவில்லை. ஆனால் என்னால் கேட்க முடிகிறது. ஒவ்வொரு இரவும், ஜெய ராதாகிருஷ்ண தாஸ பிரம்மசாரி எனக்கு சைதன்ய-சரிதாம்ருதத்தைப் படிக்கிறார். மும்பையில் உள்ள பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளை ‘டிரான்ஸ்சென்ட்’ என்ற செயலியை உருவாக்கியுள்ளது. இது ஆங்கிலம் உட்பட அனைத்து இந்திய மொழிகளிலும் உள்ளது. எனவே, எழுதத் தெரியாவிட்டாலும், ஒருவர் ஆன்மிக புத்தகங்களைக் கேட்டு வாய்மொழித் தேர்வில் பங்கேற்கலாம்.

ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகள், பகவான் சைதன்யரின் போதனைகள், ஸ்ரீமத்-பாகவதம் ஆகியவற்றை நீங்கள் படித்து விளக்க முடிந்தால், நீங்கள் நிறைய பக்தர்களை உருவாக்க முடியும். நாம் கோஷ்டி-ஆனந்திகள், எனவே பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்புகிறோம். பகவான் சைதன்யரின் கருணை பிரபஞ்சம் முழுவதும் எல்லையற்ற அளவில் பரவ வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். எனவே, பகவானை எவ்வாறு மகிழ்விக்க முடியும் என்று நீங்கள் எப்போதும் சிந்திக்க வேண்டும். இது கடினம் அல்ல. பகவானுக்கு பக்தி சேவையை எவ்வாறு செய்ய முடியும் என்று ஒருவர் தொடர்ந்து சிந்தித்தால், அவர் எப்போதும் பரிபூரண பரவசத்தில் இருப்பார். பகவான் கிருஷ்ணருக்கு எவ்வாறு சேவை செய்ய முடியும் என்று நாம் எப்போதும் பார்க்க முயற்சித்தால், அதுவே நிறைவான சிறந்த கொள்கை.

உங்கள் பாதுகாப்பிற்காக நீங்கள் தினமும் பகவான் ந்ரிஸிம்ஹதேவரைப் பிரார்த்தனை செய்யலாம். அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர், எனவே எந்த அமங்கலமான சக்தியும் அழிக்கப்படும்.

எப்போதும் ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரியுங்கள், பஞ்ச-தத்வர் மற்றும் கிருஷ்ணருக்கு சேவை செய்யுங்கள், கிருஷ்ணரைப் பற்றி சிந்தியுங்கள்!

உங்கள் நலனை எப்போதும் விரும்பும்,

ஜெயபதாக சுவாமி