
எனது அன்பான தீட்சை பெற்ற, அடைக்கலம் பெற்ற, தீட்சை பெற ஆர்வமுள்ள, சிக்ஷா சீடர்கள், பேர சீடர்கள் மற்றும் நலம் விரும்புபவர்களே,
எனது ஆசீர்வாதங்கள், வாழ்த்துக்கள், பிரணாமங்களை பொருத்தமான படி ஏற்றுக்கொள்ளுங்கள்.
ஸ்ரீல பிரபுபாதருக்கு எல்லா புகழும் உரித்தாகுக.
வசிப்பிடம்: ஸ்ரீ மாயாபூர் சந்திரோதய ஆலயம்
முகாம்: டாலஸ்
தேதி: 30 மே 2026
சிறப்பு அமசம்கள்
நான் தொடர்ந்து டாலஸிலேயே தங்கியிருக்கிறேன். நியூ ஆர்லியன்ஸில் நடைபெறவிருந்த ‘சாது சங்கா”‘ ஆன்மீக முகாமிற்கு (retreat) நான் செல்லத் திட்டமிட்டிருந்தேன்; ஆனால் எனது உடல்நலச் சூழ்நிலையின் காரணமாக, இச்சமயத்தில் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று எனது மருத்துவக் குழுவினர் எனக்கு அறிவுறுத்தினார்கள். எனவே, நான் அவர்களுக்காக ஒரு பதிவு செய்யப்பட்ட செய்தியை அனுப்பி வைத்தேன். நான் இஸ்கான் டாலஸ் ஆலயத்திற்குச் சென்று, ஞாயிறு விருந்து நிகழ்ச்சியில் ஒரு சொற்பொழிவை வழங்கினேன். நாங்கள் புதிதாகத் தயாரிக்கப்பட்ட சில ஆன்மீகப் பிரச்சாரக் காணொளிகளையும் அங்கு திரையிட்டுக் காட்டினோம்; மேலும் அவை குறித்த பக்தர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தோம். அங்கு ஒரு தீட்சை வழங்கும் விழாவும் திட்டமிடப்பட்டிருந்தது.
எனது தோல் சிகிச்சை நிறைவடைந்தது; ஜூன் மாதம் 11-ஆம் தேதியன்று மற்றொரு அமர்வு நடைபெற உள்ளது. நான் சிகிச்சைக்காகவோ அல்லது சிறுநீர் பிரித்தல் (டயாலிசிஸ்) சிகிச்சைக்காகவோ செல்லும் போதெல்லாம், ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களையும் பிரசாதத்தையும் விநியோகிக்கின்றோம்; அத்துடன் மக்களிடம் கிருஷ்ண உணர்வு குறித்து உரையாடுகிறோம். எனது மருத்துவர்களில் ஒருவரான, தீவிர கிறிஸ்தவ நம்பிக்கையுடையவருடன் , ‘கடவுள் உணர்வு’ குறித்து நான் ஒரு அருமையான உரையாடலை மேற்கொண்டேன். மேலும், கடவுளுக்குச் சேவை செய்வது குறித்தும், அவரது திருநாமத்தைச் சங்கீர்த்தனம் செய்வது குறித்தும் கலந்துரையாடி, பகிர்ந்து கொள்ளும் வகையில், நாங்கள் மின்னஞ்சல் வாயிலாகவும் தொடர்ந்து கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டு வருகிறோம்.
இந்தியாவிலிருந்து நேர வேறுபாடு காரணமாக சில சமயங்களில் அதிகாலையிலேயே கூட்டம் நடந்தாலும், நானும் எல்லா கூட்டங்களிலும் கலந்துகொள்கிறேன். நான் இன்னும் எல்லா கூட்டங்களிலும் கலந்துகொண்டு, ஸ்ரீல பிரபுபாதருக்கான எனது சேவைகளைத் தொடர முயற்சிக்கிறேன்.
இவை தவிர நான் தினமும் பக்தர்களைச் சந்திக்கிறேன். உள்ளூர் பக்தர்கள் மற்றும் தலைவர்களில் சிலர் வந்து தங்கள் பிரச்சார அறிக்கைகளைச் சமர்ப்பித்து தங்கள் சேவை செயல்பாடுகளைப் பற்றி எனக்குத் தெரிவித்தனர்.
ஸ்ரீல பிரபுபாதரின் செய்தி
“…ஒவ்வொருவரும் மிகவும் தீவிரமாக இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். இது மிகவும் தீவிரமான ஒரு பணி… எனவே நாம் பின் தங்கி விடக் கூடாது. இருப்பினும்,பிரத்தியக்ஷாவாகமம் தர்மியம்/ சு-சுகம் கர்த்தும் அவ்யயம் [பகவத் கீதை 9.2]
நீங்கள் என்ன செய்திருந்தாலும், அது ஒருபோதும் அழியாது. என் குரு மஹாராஜர் கூறுவார்—அவர் இந்த விஷயத்தை வலியுறுத்தினார்—”மற்றொரு பிறவிக்காகக் காத்திருக்காதீர்கள்.” “இந்தப் பிறவியிலேயே இந்தக் காரியத்தை முடித்துவிடுங்கள்.” அதுதான் அவருடைய பரிந்துரை. இருப்பினும் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தாலும் அது ஒருபோதும் வீணாகாது. உதாரணமாக, நீங்கள் நூறு புள்ளிகள் முடிக்க வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் ஐம்பது , அல்லது அறுபது புள்ளிகளை முடித்திருந்தால் ,அது ஒரு போதும் வீணாகாது.
அதுவே உண்மை. ஆனால் இன்னும் முப்பது அல்லது நாற்பது புள்ளிகளுக்காக, இன்னொரு பிறவிக்காக ஏன் காத்திருக்க வேண்டும்? அது ஒரு தொல்லை. …இந்தப் பிறவியிலேயே நாம் இந்த நூறு புள்ளிகளை முடித்துவிட வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு பக்தி சேவையைச் செய்துவிட்டு கிருஷ்ணரின் திருநாட்டிற்கு, பகவானிடம் திரும்பிச் செல்ல வேண்டும் என்பதில் ஒவ்வொருவரும் மிகவும் தீவிரமாக இருக்க வேண்டும்.” ஸ்ரீமத் பாகவதம் 6.2.45, ஜனவரி 29, 1971, பிரயாகை.
“எனது வேண்டுகோள் என்னவென்றால் நீங்கள் உங்கள் பக்தி சேவையை மிகவும் உண்மையாகவும் உறுதியாகவும் தொடர வேண்டும், அப்போது இந்தப் பிறவியிலேயே உங்களால் கிருஷ்ணரை நேருக்கு நேர் காண முடியும். அதுவே உண்மை.” பிரியாவிடை சொற்பொழிவு, பிப்ரவரி 25, 1975, கராகஸ்.
எனது செய்தி
50,000-க்கும் மேற்பட்ட சீடர்களை உருவாக்குமாறு ஸ்ரீல பிரபுபாதர் என்னிடம் கூறினார். அதனுடன், உங்கள் அனைவரையும் பகவானின் திருநாட்டிற்குக் கொண்டு சேர்க்கும் பொறுப்பும் அத்துடன் வருகிறது. எனது சீடர்கள் அனைவரும் பகவானிடம் திரும்பச் செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 16 சுற்றுகள் ஜபம் செய்வது மற்றும் நான்கு ஒழுங்குமுறைக் கொள்கைகளைப் பின்பற்றுவதுடன், உங்களுக்கு உதவும் சில வழிகளையும் நான் பரிந்துரைத்துள்ளேன்.
1. உங்களிடம் காயத்ரி தீக்க்ஷை இல்லையென்றால், மூன்று சந்தியா வேளைகளில் தலா ஒரு சுற்று ஜபம் செய்யுங்கள்.
2. உங்கள் வருமானத்தில் குறைந்தபட்சம் 11%-ஐ கிருஷ்ண உணர்விற்கு அர்ப்பணியுங்கள். இதில் உங்கள் தனிப்பட்ட சேவைகளுக்கான செலவுகள், தீக்ஷா குரு, சிக்ஷா குரு, உள்ளூர் கோவிலுக்கு நன்கொடை, பல்வேறு இஸ்கான் திட்டங்களுக்கு நன்கொடை, ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களை வாங்குதல் போன்றவை அடங்கும். கணவன், மனைவி இருவரும் கிருஷ்ண உணர்வுடன் இருந்தால், அவர்கள் ஒன்றாகச் சிந்தித்து, தாங்கள் என்ன கொடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கலாம். உதாரணமாக, அவர்கள் 50 ரூபாய் அல்லது 50 டாலர் நன்கொடை அளிக்க விரும்பினால், அதை 100 பேருக்குக் கொடுத்தால், அது 5000 ரூபாய் அல்லது 5000 டாலராகும். அதுபோல, ஒருவர் தீக்ஷா குருவுக்கு 500 ரூபாயும், உள்ளூர் கோவிலுக்கு 1000 ரூபாயும் கொடுக்கலாம், அவர்கள் தங்கள் நன்கொடையைப் பிரித்துக் கொள்ளலாம்.
3. உங்கள் செயல்கள் அனைத்தையும் கிருஷ்ண பகவானுக்கு அர்ப்பணியுங்கள்.
4. திருநாமத்திடம் சரணடையுங்கள். திருநாமமே நமது சிறந்த நண்பன்.
5. கிருஷ்ண உணர்வில் முன்னேறுவதற்கு, ஒருவர் நான்கு அல்லது ஐந்து சிக்ஷா குருக்களைக் கொண்டு அவர்களிடம் வழிகாட்டுதலைப் பெறலாம். கலியுகத்தில், திருநாமமே ஒரே வழியாகும். நாம் திருநாமத்தை உச்சரித்தால், பகவானிடம் திரும்பிச் செல்ல முடியும்.
ஊக்கமளிக்கும் கதைகள்
ஏப்ரல் மாதம் நான் ஆற்றிய வியாஸ-பூஜை சொற்பொழிவிற்குப் பிறகு, பலர் மூன்று சந்தியா வேளைகளில் மூன்று சுற்றுகள் ஜபிக்கத் தொடங்கியுள்ளதாகவும், மேலும் பலர் தங்கள் வருமானத்தில் 11%-ஐ கிருஷ்ணரின் சேவைக்கு வழங்கத் தொடங்கியுள்ளதாகவும் பக்தர்களிடமிருந்து எனக்குப் பல தகவல்கள் வருகின்றன. இது மிகவும் ஊக்கமளிக்கிறது.
புருஷோத்தம மாத சேவைத் திட்டங்கள் குறித்த சில தகவல்களையும் நான் பெற்றேன். பலராம கோவிந்த தாஸ் எனக்கு எழுதியதாவது : மதுரையில் அவர்கள் ஹரிநாம-ஸங்க உத்ஸவம் என்ற இரண்டு நாள் நிகழ்ச்சியை நடத்தியிருந்தனர். அதில் சுமார் 2,400 புதிய நபர்கள் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஒரு சுற்று ஜபித்தனர், மேலும் அவர்கள் தினமும் ஒரு சுற்று ஜபிக்கும் சங்கல்பத்தை மேற்கொண்டனர். இந்தப் புதிய தொடர்புகளை ஏற்படுத்தி, அவர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ளவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இப்போது, கிட்டத்தட்ட ஒரு மாதமாக எனது ஜெயபதாக ஸ்வாமி செயலியில் தினமும் ஜப தியான செய்திகளை அனுப்பி வருகிறேன். எனவே, நீங்கள் அதைப் படித்து, அபராதமின்றி நாமஜபத்தில் ஈடுபட்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
ஒருவர் தனது செய்தியில், அவர்கள் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக தூக்க மாத்திரைகளையும் மன அழுத்த எதிர்ப்பு மருந்துகளையும் உட்கொண்டு வந்ததாகவும், ஆனால் இப்போது, தினமும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சாடனம் செய்யத் தொடங்கிய பிறகு, அவர்களுக்கு இனி தூக்க மாத்திரைகளோ மன அழுத்த எதிர்ப்பு மருந்துகளோ தேவையில்லை என்றும் எனக்கு எழுதியிருந்தார். ஹரிநாமமே நமது எல்லா பிரச்சனைகளுக்கும் சிறந்த மருந்து!
இது புருஷோத்தம மாதம், நாம் செய்யும் எந்தவொரு ஆன்மீகச் செயல்களாலும், ஆயிரம் மடங்கு அதிக பலனைப் பெறுவோம். புருஷோத்தம மாதத்தைப் பற்றி ஜேபிஎஸ் மீடியாவால் தயாரிக்கப்பட்ட இரண்டு நிமிடங்களுக்கும் குறைவான ஒரு காணொளி உள்ளது.
புருஷோத்தம மாதத்தில் இன்னும் இரண்டு வாரங்கள் மீதமுள்ளன!
அனைத்து பக்தர்களும் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் கருணையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர் ஸங்கீர்த்தனத்தை அருளினார், அதன் மூலம் நாம் ஒரே பிறவியில் கிருஷ்ணரின் தாமரைத் திருவடிகளை அடைய முடியும். எனவே இது ஒரு மாபெரும் கருணை.
நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், ஆனந்தமயமான கிருஷ்ண உணர்வோடும் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
உங்கள் நலனை எப்போதும் விரும்பும்,
ஜெயபதாக ஸ்வாமி