திரிவிக்ரம மாதம்
மாதாந்திர செய்தி (13 மே – 11 ஜூன் 2025)
எனது அன்பான தீட்சை பெற்ற, அடைக்கலம் பெற்ற, தீட்சை பெற ஆர்வமுள்ள, சிக்ஷா சீடர்கள், பேர சீடர்கள் மற்றும் நலம் விரும்புபவர்களே,
எனது ஆசீர்வாதங்களையும் வாழ்த்துக்களையும் பொருத்தமானபடி ஏற்றுக்கொள்ளுங்கள்.
எல்லா புகழும் ஸ்ரீல பிரபுபாதருக்கே !
எனது வசிப்பிடத்திலிருந்து எழுதப்பட்டது: ஸ்ரீ மாயாபூர் சந்திரோதய ஆலயம்
தேதி: 11 ஜூன் 2025
நான் அமெரிக்காவிலுள்ள அட்லாண்டாவிற்கு, பானிஹாடி விழாவிற்கு பயணம் செய்து, பின்னர் கொல்கத்தா ரத-யாத்திரைக்கு திரும்பி வர விரும்பினேன். ஆனால் ரத-யாத்திரை ஜூன் 27 அன்று, பின்னர் ஜூலை தொடக்கத்தில் எனக்கு பணியகக் கூட்டங்கள் உள்ளன. அதனால், நான் குறுகிய காலத்தில் திரும்பி வர வேண்டியிருக்கும் என்று என் உடல்நலக் குழு கூறியதால், உல்டா ரதத்திற்குப் ( ரதம் திரும்பி வருதல்) பிறகு நான் பயணம் செய்யலாம் என்று அவர்கள் பரிந்துரைத்தனர்.
இந்த ஆண்டு, அட்லாண்டாவில் பானிஹாட்டி விழாவின் 50வது ஆண்டு விழா. 1980 ஆம் ஆண்டு நான் முதன்முதலில் அக்கோயிலுக்குச் சென்றபோது, அட்லாண்டாவில் உள்ள கோயிலுக்கு ஸ்ரீல பிரபுபாதர் புதிய பானிஹாட்டி தாமம் என்ற பெயரைச் சூட்டியதாக அவர்கள் என்னிடம் சொன்னார்கள். ஆனால் அவர்களுக்கு சிடா-தஹி விழாவைப் பற்றி எந்த அனுபவமும் இல்லை. மேற்கத்திய நாடுகளில் யாருக்கும் பானிஹாட்டி என்றால் என்ன, அது எதைக் குறிக்கிறது, அது எதைப் பற்றியது என்பது தெரியாது. ஆனால், இந்த சிடா-தஹி உத்சவத்தின் முழு லீலைகள் சைதன்ய-சரிதாம்ருதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. பானிஹாட்டி சைதன்ய மஹாபிரபுவின் லீலைகளில் மிகவும் சிறப்பு வாய்ந்த இடங்களில் ஒன்றாகும், மேலும் வங்காளத்தில் முதன்முதலில் பகவான் நித்யானந்தர் ஜகந்நாத புரியிலிருந்து தனது சங்கீர்த்தனக் குழுவை அழைத்து வந்த இடம் இதுவாகும்.
எனவே நான் அங்கு சென்றபோது 18 வகையான சிடா-தஹி பிரசாதத்தைக் கொண்டு விழாவைத் தொடங்கினோம். பின்னர் ஒரு வருடத்தில் என் பூர்வாஷ்ரம தாயார் சிடா-தஹி விழாவிற்காக புதிய பானிஹாட்டி தாமத்திற்குச் சென வந்த போது சிடா-தஹி பானைகளை ஏலம் செய்து கோயிலுக்கு நிதி திரட்டுமாறு பரிந்துரைத்தார். நாங்கள் அதை முயற்சித்தோம். அது மிகவும் வெற்றிகரமாக இருந்தது. எனவே, புதிய பானிஹாட்டி தாமத்தில் நேரத்தை மிச்சப்படுத்த பொது மக்கள் பானைகளுக்கு நிதியுதவி செய்ய அனுமதித்தனர். மேலும் அவர்கள் 3 அல்லது 4 பானைகளை மட்டுமே ஏலம் விட்டனர். இஸ்கான் லண்டனில் பானிஹாட்டி சிடா-தஹி பானை ஏலத்துடன் பக்தர்களை புத்தகத் தொகுப்பை பெற ஊக்குவிப்பதாகக் கேள்விப்பட்டேன்.
இங்கே மாயாபூரில் மிகவும் அருமையான பானிஹாட்டி விழா நடந்தது. மாயாபூர் தாமத்தை உருவாக்குவது என்பது ஸ்ரீல பிரபுபாதர் எனக்குக் கொடுத்த கட்டளைகளில் ஒன்றாகும். ஸ்ரீல பிரபுபாதர் என்னிடம், “நான் உங்களுக்கு ஆன்மீக உலகத்தைக் கொடுத்துள்ளேன். இப்போது நீங்கள் அதை வளர்க்க வேண்டும்!” என்று கூறினார். அப்போதிருந்து மாயாபூர் தாமத்தை பல்வேறு வழிகளில் வளர்க்க நான் முடிந்தவரை முயற்சி செய்து வருகிறேன். கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு காலத்தில் நான் இங்கே மாயாபூரில் இருந்தேன். அந்த நேரத்தில் நாம் ஒரு பானிஹாட்டி விழாவை நடத்தினோம். ஒவ்வொரு ஆண்டும் மாயாபூரில் இவ்விழாவை நடத்துமாறு இணை இயக்குநர்களிடம் நான் கேட்டுக்கொண்டேன், அவர்கள் ஒப்புக்கொண்டனர். எனவே இப்போது பஞ்ச-தத்வரின் மகிழ்ச்சிக்காக மாயாபூரில் இதை வருடாந்திர விழாவாக மாற்றுவோம் என்று அவர்கள் கூறினார்கள். அனைத்து பக்தர்களும் உற்சாகமாக விழாவில் பங்கேற்பதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஏதோ காரணத்தால் மாயாபூரில் பானைகள் ஏலம் விடப்படவில்லை. ஆனால் அடுத்த ஆண்டு அதைச் செய்வோம் என்று கூறியுள்ளனர். தவத்திரு பக்தி விஜய் பாகவத ஸ்வாமி ஒரு நாள் நித்தாய்-பானிஹாட்டி தொடர் புத்தக விநியோகம் (மாரத்தான்) நடத்தினார். அதில் அவர் 486 சைதன்ய-சரிதாமிர்தம் தொகுப்புகளை விநியோகித்தார். ஸ்ரீ மாயாபூர் சர்வதேசப் பள்ளியில் மாணவர்கள் மே 17 ஆம் தேதி தனிப்பட்ட பானிஹாட்டி விழாவையும் நடத்தினர். உலகம் முழுவதும் பல இடங்களில் பானிஹாட்டி விழா கொண்டாடப்பட்டுள்ளது.
பானிஹாட்டியில் ஒரு கோயில் கட்ட ஸ்ரீல பிரபுபாதர் எனக்குக் கட்டளையிட்டுள்ளார். இன்னும் எனக்கு இதற்காக ஒரு செயலாளர் இல்லை. அசல் ஆலமரம் இருக்கும் இடத்தில் ஒரு கோயிலை ஸ்ரீல பிரபுபாதர் அமைக்க விரும்பினார். தரை தளம் திறந்திருக்கும், திருவிக்கிரகங்கள் இரண்டாவது மாடியில் இருப்பார்கள்.
இன்று ஸ்நான-பூர்ணிமா மற்றும் ராஜாபூரில், மிகவும் சிறப்பு வாய்ந்த ஸ்நான-யாத்திரை, அதாவது பகவானின் திருநீராட்டு விழா நடைபெறுகிறது. பல பக்தர்களும் கிராம மக்களும் இன்று ஜெகந்நாதர், பலதேவர், சுபத்ரா தேவி மற்றும் சுதர்சனரை நீராட்ட வருகிறார்கள். கடந்த மாதம் திகா ஜெகந்நாதர் கோயில் திறப்பு விழா நடைபெற்றது, கோவில் நிர்வாகக் குழுவில் ஒரு அங்கத்தினராக இருக்கும் அருள்திரு ராதாரமண தாஸிடமிருந்து கோவில் பற்றிய வழக்கமான புதுப்பித்த தகவல்களைப் பெற்று வருகிறேன். பல வெளிநாட்டு பக்தர்கள் கோவிலுக்குச் சென்று கீர்த்தனை, புத்தக விநியோகம் மற்றும் பல்வேறு சேவைகளைச் செய்தனர். இந்த செய்தியானது உள்ளூர் செய்தித்தாள்களிலும் வெளியிடப்பட்டது. ஆயிரக்கணக்கான உள்ளூர் யாத்ரீகர்கள் தினமும் கோயிலுக்கு வருகை தருகின்றனர். மாயாபூரைச் சேர்ந்த பல பக்தர்களும், மாயாபூர் நிறுவனத்தைச் சேர்ந்த பக்தர்கள் குழுவும் கோவிலுக்குச் சென்று கீர்த்தனை மற்றும் புத்தக விநியோகத்தைச் செய்தனர். எனவே, இது எங்களுக்குக் கிடைத்த ஒரு சிறந்த பிரசார வாய்ப்பாகும்.
நரஸிம்ஹ-சதுர்தசிக்கு ஒரு வாரத்திற்குப் பிறகு, எனக்கு காய்ச்சல் மற்றும் சில தொற்றுகள் ஏற்பட்டன, அதற்கு நான் சிகிச்சை பெற்றேன். என் குரல் மிகவும் பலவீனமாகிவிட்டது, அது இன்னும் பலவீனமாகவே உள்ளது. இருப்பினும், நான் ஸ்ரீல பிரபுபாதருக்கு என் சேவைகளைத் தொடர்கிறேன். கிருஷ்ண உணர்வு இல்லாமல் ஒரு கணம் கூட வீணாக்காமல் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார். நான் எனது தினசரி மந்திர ஜபம் மற்றும் பாராயணங்களைச் செய்தேன், பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டேன், பக்தர்களுக்குத் தீட்சை வழங்கினேன், திருவிழாக்கள் மற்றும் பல சேவைகளில் கலந்து கொண்டேன். சில நேரங்களில், என் செயலாளர்கள் என் குரலுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று என்னிடம் கூறுகிறார்கள். எனவே, நான் பல்வேறு ஆவணங்கள், மின்னஞ்சல்கள் போன்றவற்றைக் கேட்கிறேன், மேலும் எனது குரலில் அதிக அழுத்தம் ஏற்படாமல் இருக்க கை சைகைகள் அல்லது குறைந்தபட்ச வார்த்தைகளில் பதில்களை வழங்குகிறேன். எனது சிறுநீர் பிரித்தல் சிகிச்சை அறையில் ஒரு பெரிய திரை உள்ளது, எனவே பக்தர்களிடமிருந்து காணொளி அறிக்கைகளைப் பார்க்கவும், வெவ்வேறு ஆவணங்களைப் பார்க்கவும் சிறுநீர் பிரித்தல் சிகிச்சை நேரத்தைப் பயன்படுத்துகிறேன். மேலும் சீடர்கள் தங்கள் காணொளி அறிக்கைகளை அனுப்புவதைக் கேட்க நான் காத்திருக்கிறேன், அவர்கள் அனுப்பினால் அது மிகவும் நன்றாக இருக்கும்.
அனைத்து பக்தர்களும் தங்கள் பக்தித் தொண்டில் மிகுந்த உற்சாகத்துடன் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அப்பொழுது அவர்கள் கிருஷ்ண உணர்வில் மிக விரைவாக முன்னேற முடியும். நான் கனடாவில் உள்ள மாண்ட்ரீயலில் இருந்தேன், அங்கு எனது முதல் ஆண்டில், நான் மாண்ட்ரீயலின் மூன்றாவது நிர்வாக அதிகாரியாக கோவிலில் நியமிக்கப்பட்டேன், ஏனெனில் ஸ்ரீல பிரபுபாதர் எனக்கு வழங்கிய எந்தவொரு சேவையையும் நான் உற்சாகத்துடன் ஏற்றுக்கொண்டேன். பக்தி யோகப் பெருங்கடலின் அமிர்தத்தைச் சுவைப்பதற்கு அனைத்து பக்தர்களும் தங்கள் பக்தித் தொண்டில் முன்னேற வேண்டும். பக்தி யோகம் என்னும் பக்தி சேவை, அமிர்த பெருங்கடல் போன்றது. ஆனால் பக்தர்கள் ஒழுங்குமுறை கொள்கைகளைப் பின்பற்றி தொடர்ந்து ஜபம் செய்து பயிற்சி செய்ய வேண்டும் மற்றும் இந்த வழியில் கிருஷ்ண உணர்வில் முன்னேற வேண்டும். நீங்கள் அனைவரும் தினமும் குறைந்தபட்சம் 16 சுற்று மாலைகளை ஜபித்து 4 ஒழுங்குமுறை கொள்கைகளை தவறாமல் பின்பற்றுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். புனித நாம ஜபமானது கிருஷ்ணரிலிருந்து வேறுபட்டதல்ல. ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபிப்பது நமது இதயக் கண்ணாடியில் படிந்துள்ள ஜட உலகின் அனைத்து தூசுகளையும், அழுக்குகளையும் அகற்றி சுத்தம் செய்வதை போன்றது என்று சைதன்ய மஹாபிரபு தனது சிக்ஷாஷ்டகத்தின் முதல் பதத்தில் கூறியுள்ளார்.
சமீபத்தில், சில பக்தர்கள் தற்செயலாக அசைவப் பொருட்கள் கலந்துள்ள உணவுகளை உட்கொண்டதாக எனக்கு எழுதினார்கள். வெங்காயம், பூண்டு, முட்டை போன்றவை உணவில் கலந்துள்ளதா என்பதை நாம் மிகவும் கவனத்துடன் சரிபார்க்க வேண்டும். நான் பயணம் செய்யும் போதெல்லாம், எனது பிரசாதத்தை நானே எடுத்துச் செல்கிறேன். மேலும் அதை மட்டுமே நான் உட்கொள்கிறேன். விமானத்தில், பழங்கள் அல்லது சில நறுக்கிய பச்சை காய்கறிகளை (ஸாலட்) மட்டுமே நான் எடுத்துக் கொள்வேன். ஏனென்றால் நாம் அவர்களைச் நம்ப முடியாது. எனவே அசைவ உணவு உண்பது, தவறான உடலுறவு கொள்ளுதல், சூதாட்டம் ஆடுதல், போதை பழக்கத்திற்கு அடிமையாகுதல் போன்றவற்றில் இருந்து நம்மை நாம் ஈடுபடுத்திக் கொள்ளாமல் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
எனது சீடர்கள் அனைவரும் ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களை முறையாகப் படித்து, பட்டங்களைப் பெற்று, பிரசாரம் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மேலும், அவர்கள் பிரசாரம் செய்வதை அவர்கள் பின்பற்ற வேண்டும். பக்தி வாழ்க்கையில் மூத்தவர்கள் இளைய பக்தர்களைக் கவனித்துக்கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். அக்கறையுள்ள நபரே ஒரு உண்மையான பக்தர். முதலில், ஆன்மீகப் பயிற்சிகள் மூலம் மற்றவர்களுக்கு உதவ அவர்கள் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு முறை, ஒரு மகன் ஆற்றில் விழுந்து மூழ்கிய சம்பவம் நடந்தது. தந்தை மகனைக் காப்பாற்ற விரும்பி தண்ணீரில் குதித்தார். ஆனால் பின்னர் தனக்கு நீச்சல் தெரியாது என்பதை உணர்ந்தார். எனவே மகனும் தந்தையும் மூழ்கி இறந்தனர். எனவே, யாராவது ஒருவர் உயிர்காப்பாளராக இருக்க விரும்பினால், அவர்கள் முதலில் நீச்சல் கற்றுக்கொண்டு உயிர்காக்கும் நுட்பங்களில் பயிற்சி பெற வேண்டும். ௮தேபோல் பக்தர்கள் கிருஷ்ண உணர்வை தீவிரமாகப் பயிற்சி செய்து, தங்கள் குணத்திலும் ஆன்மீக அறிவிலும் நன்கு வளர்ந்தவர்களாகி, மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். வேறொருவருக்கு உதவுவதற்கு முன், நீங்கள் முதலில் உங்கள் சொந்த வாழ்க்கையில் ஆன்மீகப் போதனைகளைப் பயிற்சி செய்ய வேண்டும். இப்போது, நீங்கள் ஒரு மாணவராக இருக்கலாம், ஆனால் பின்னர் நீங்கள் ஒரு ஆசிரியராக ஆவீர்கள், எனவே இந்தப் பொறுப்பை ஏற்க உங்களை நீங்களே தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
நீங்கள் அனைவரும் உங்கள் பக்தி சேவையில் மிகவும் உறுதியாக இருக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.
எப்போதும் உங்கள் நலனை விரும்பும்,
ஜெயபதாக சுவாமி